| ADDED : நவ 28, 2025 08:10 AM
கம்பம்: தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றில் புதிதாக 5 மைக்ரோ நீர் மின் நிலையங்கள் தனியார் பங்களிப்பில் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முல்லைப் பெரியாற்றில் லோயர்கேம்ப்பில் ஆரம்பித்து வைகை வரை ஆற்றுக்குள் நீரை தேக்கி சிறு புனல் நீர் மின் நிலையங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்தது. முதற்கட்டமாக லோயர் கேம்ப் முதல் வீரபாண்டி வரை 20 மைக்ரோ மின் நிலையங்கள் அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டது. இத் திட்டத்தில் லோயர்கேம்ப் குறுவனூத்து பாலம், காஞ்சி மரத்துறை, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் 4 மைக்ரோ நீர் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இது தவிர மீதமுள்ள மின் நிலையங்கள் நிதி பிரச்னையால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பி.பி.என். (PPN power Generating Company) என்ற நிறுவனத்துடன் தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் அடிப்படையில் சுருளிப் பட்டி , நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி முதல் கூடலூர் செல்லும் வழி என 5 இடங்களில் மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மின் நிலையமும் தலா 5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.