உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வேளாண் கண்காட்சி சாகுபடி, மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்க நவீன இயந்திரங்கள் ஏராளம்

பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வேளாண் கண்காட்சி சாகுபடி, மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்க நவீன இயந்திரங்கள் ஏராளம்

தேனி : தேனி அருகே நடந்த வேளாண், உணவு தொழில் கண்காட்சியில் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் பல்வேறு யுக்திகள், இயந்திரங்கள் இடம் பெற்றன. விவசாயத்திற்கான நவீன இயந்திரங்கள், மதிப்பு கூட்டிய பொருட்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.*பழனிசெட்டிபட்டியில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லுாரி வணிக மேம்பாட்டு மையம் சார்பில் 3 நாட்கள் வேளாண், உணவு தொழில்நுட்ப கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சயில் 98 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள், தொழில் முனைவோர், இல்லத்தரசிகள், இயற்கை ஆர்வலர்களை கவரும் வகையில் பல வகையான நவீன இயந்திரங்கள், கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை தவிர பாரம்பரிய நாட்டு விதைகள் , விதவிதமான பூச்செடிகள், பழக்கன்றுகள், பயனுள்ள மரக்கன்றுகள் வைத்திருந்தனர். ஒரு ஸ்டாலில் 60 வகையான அரிவாள் ரூ.55 முதல் ரூ.1520 விலையில் பல்வேறு வகை மண்வெட்டிகள், கோடாரிகள், கத்தி, தேங்கய் உரிக்கும் இயந்திரங்கள், விற்பனை செய்யப்பட்டன. வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டி பல வகை உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தினர். விளை பொருட்களை மதிப்பு கூட்டி சுவையாக வழங்கினாலும் வாடிக்கையாளரை கவரும் வகையில் பேக்கிங் நேர்த்தியாக இருந்தால்தான் அந்த பொருளுக்கு தனி மதிப்பும், விற்பனை அதிகரிக்கும். இந்த நுட்பத்தை எளிதாக விளக்கும் வகையில் தானியங்கி பேக்கிங் மிஷன்களை காட்சிப்படுத்தினர். இதன் விலை ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் மதிப்பில் இருந்தது. இந்த பேக்கிங் மிஷின்களில் மசாலா பொடி, இட்லி, தோசை மாவினை அரைத்து எடையினை நிர்ணயித்து விட்டால் தானியங்கி முறையில் பேக்கிங் ஆகி வரும்.இது தவிர அதிக மகசூல் தரும் வியாட்நாம் பலா, டிராகன் புரூட், மியாவாக்கி மா கன்றுகள், ருத்ரா செடி, கருங்காலி கன்று, பல வகையான பூச்செடிகள் இடம் பெற்றன. பல வண்ணங்களில் பூக்கும் கோழிக்கொண்டடை பூ சாகுபடியில் 4 வகை ரகங்கள் இருந்தன.பெண்கள் வீடுகளிலே பாப்கான் தயாரித்தலுக்கான இயந்திரம், பல சுய தொழில் துவங்குவோருக்கு உதவிடும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட லட்டு, கேக் மற்றும் பேக்கரி வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆல்ஹகால் இல்லாத ஒயின் விற்பனை செய்தனர். ஒரு ஏக்கருக்கு 12 நிமிடங்களில் மருந்து தெளிக்கும் வகையில் டிரோன் காட்சிப்படுத்தினர். டிரோன் பயன்படுத்துவதால் நேரம் குறைவு, சீராக மருந்து தெளிப்பது இதன் சிறப்பு அம்சமாகும். இது விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என்பதை விளக்கி கூறினர். சிறிய வடிவிலான மண் அள்ளும் இயந்திரம், டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளை விவசாயிகள் ஆர்வமாக பார்வையிட்டனர்.

செலவை குறைக்கும் நவீன இயந்திரங்கள்

ஜெயகாந்தன், விவசாயி, போடி: நான் தென்னை, கொய்யா, மா விவசாயம் செய்து வருகிறேன். இங்கு அதிக அளவில் இயற்கை உரம் விற்பனை செய்யும் ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. பிற நகரங்களில் நடக்கும் வேளாண் கண்காட்சிகளுக்கு தவறாது செல்வேன். விவசாயத்தில் செலவினை குறைக்கும் வகையில் பொருட்கள் இருந்தால் அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறேன்.கோழி வளர்ப்பிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தது. கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது.

ஆடுவளர்ப்பு லாபகரமான தொழில்

டாக்டர். செந்தில்முத்துக்குமரன், நாமக்கல்:வணிகமுறையில் ஆடுவளர்ப்பு லாபகரமான தொழில் ஆகும். ஐநுாறு ஆடுகள் வரை வாங்கி வளர்ப்பதற்கு அரசு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. ஆடு வளர்ப்பில் உள்ளூர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். இவற்வை வாங்குவதற்கு முன் பசுந்தீவணங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். முடிந்தஅளவு தீவனங்களை நாம் உற்பத்தி செய்து கொள்வது நல்லது. விலை குறைந்த, சத்துள்ள தீவனங்களை பயன்படுத்த வேண்டும். ஆடுகளுக்கு தடுப்பூசி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்த வேண்டும். வழிமுறைகளை பின்பற்றினால் ஆடு வளர்ப்பு லாபகரமான தெழில்ஆகும். என்றார்.

விவசாயிகள் ஆர்வத்தால் மீண்டும் கண்காட்சி

வசந்த் செல்வன், சி.இ.ஓ., தோட்டகலை வணிக மேம்பாட்டு மைய, பெரியகுளம்.கண்காட்சியை பார்வையிட விவசாயிகள் அதிக அளவில் வருகின்றனர். தங்கள் சந்தேகங்களை ஸ்டால்களில் கேட்டு விளக்கம் பெறுகின்றனர்.விவசாயத்திற்கு தேவையான கருவிகள் விற்பனை செய்யும் இடங்கள், கருத்தரங்கில் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.வரும் ஜூலையில் மீண்டும் வேளாண் கண்காட்சி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். கல்லுாரி மாணவர்கள், பெற்றோர்களும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். பலர் வீடுகளில் வளர்ப்பதற்கு தேவையான செடிகள், பொருட்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்