பயிர்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகளால் விவசாயம் ... பாதிப்பு
போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, போடிமெட்டு, வடக்குமலை, அகமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் காபி பயிரிட்டு உள்ளனர். இதன் இடையே ஓங்கி வளர்ந்துள்ள மரங்களில் மிளகு கொடிகளை வளர்த்து வருகின்றனர். கொடியில் மிளகு நன்கு வளர்ந்துள்ள நிலையில் காட்டுப் பன்றிகள் கூட்டம், கூட்டமாக தோட்டங்களுக்குள் புகுந்து மிளகு கொடி, சேமக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விளைந்த மிளகு கூட பறிக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். ஏலச்செடிகளை காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. சமீபமாக காட்டு மாடுகள் தனது குட்டிகளுடன் தோட்டங்களுக்குள் தாராளமாக உலா வருகின்றன. காட்டு மாடுகள் தாக்கியதில் இதுவரை 10 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர். இச்சம்பவம் தொடர்வதால் இரவில் விவசாயிகள், தொழிலாளர்கள் தோட்டங்களில் தங்கவும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்று வர முடியாமல் அச்சத்தில் உள்ளனர். வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்க அகழிகள் அமைக்கவும், 25 கி.மீ., தூரத்திற்கு சோலார் மின் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் முதன்மை வன பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்து பல ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல் படுத்தாமல் முடங்கியுள்ளது. இயற்கை சீற்றங்களால் அவதிப்படும் விவசாயிகள், மறுபுறம் வன விலங்குகளாலும் பாதிப்பு அடைகின்றனர். வனப்பகுதியில் தடுப்பணைகள் இல்லாததால் தண்ணீர் தேடி வனவிலங்குகள் தோட்ட பகுதியில் வருகின்றன. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். உயிர் பலி தொடர்வதால் காட்டுமாடு களை கட்டுப்படுத்தவும், பயிர்களை காக்கவும், வனப்பகுதியை சுற்றி அகழி அமைக்கவும், 25 கி.மீ., தூரத்திற்கு சுற்றி சோலார் மின் வேலி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.