| ADDED : நவ 18, 2025 04:33 AM
தேனி: மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு முடிந்து 3 மாதங்களுக்கு மேல் ஆகியும், நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடாமல் இருப்பதால், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இம்மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு சுமார் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வி, ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில் பணியாளர், சமையலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிபுரிவோர் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்.,ல் 156 அங்கன்வாடி பணியாளர், 29 உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியானது. ஏப்.,23க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சுமார் 2500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். மூன்று மாதங்களுக்கு முன் வட்டாரம் வாரியாக நேர்முகத் தேர்வுகள் நடந்தன. இதில் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் சுமார் 1600 பேர் பங்கேற்றனர். சில மாவட்டங்களில் அங்கன்வாடி பணியாளர் நேர்முகத் தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பணியில் சேர்ந்து விட்டனர். ஆனால், தேனி மாவட்டத்தில் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆன நிலையிலும், தேர்வானவர்களின் நியமன பட்டியலை வெளியிடாமல் இருப்பதால், காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இதனால் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் புலம்புகின்றனர். அதே நேரம் பணியில் இருந்தவர்கள் சிலரும் ஓய்வு பெற்று சென்றுவிட்டதால், பணியில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படும் நிலை தொடர்கிறது. மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் ரேவதி கூறுகையில், ''தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும்.'', என்றார்.