உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை துவங்கியதால் இளநீர் விற்பனை விறுவிறுப்பு : தேவை அதிகரிப்பால் விலை உயர்வு

கோடை துவங்கியதால் இளநீர் விற்பனை விறுவிறுப்பு : தேவை அதிகரிப்பால் விலை உயர்வு

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு, வராகநிதி, வைகை ஆறு உள்ளிட்ட ஆற்று நீர் பாயும் பகுதிகளை யொட்டி பல நுாறு கிராமங்களில், நகர் பகுதிகளை சுற்றியும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் வறட்சி மற்றும் நோய் தாக்குதலால் பல நூறு தென்னை மரங்கள் அழிந்தன.தென்னையில் நிரந்தர வருவாய் இருப்பதால் விவசாயிகள் பல இடங்களிலும் புதிதாக தென்னை கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். தென்னையில் ஆண்டு முழுவதும் காய்ப்பு இருந்தாலும் இளநீருக்கான கோடைகால காய்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தேனி மாவட்டத்தில் விளையும் இளநீர் உள்ளூர் தேவையுடன் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஏஜன்ட்டுகள் சென்னை, பெங்களூரு, கேரளா, மும்பை, கொல்கத்தா பகுதிகளுக்கு இளநீர் அனுப்பப்படுகிறது. இயற்கை குளிர்பானம் என்பதால் கிராமங்களை விட பெரிய நகரங்களில் விற்பனை அதிகம் உள்ளது. இளநீர் பறிப்பில் கூலி மற்றும் போக்குவரத்து செலவு அதிகமாவதால் விலை உயர்கிறது.விலை உயர்வால் விற்பனை மந்தம்இளநீர் வியாபாரிகள் கூறியதாவது: தென்னை நடவிலிருந்து பத்து ஆண்டுகள் வரை இளநீர் பறிக்கலாம். முற்றிய, உயரமான மரங்களில் இளநீர் பறிப்பதில்லை. அவை தேங்காய்க்கு மட்டுமே பயன்படும். நாட்டு ரகங்களை விட ஒட்டு ரகத்தில் நீரின் அளவு அதிகம் இருக்கும். நெட்டை, குட்டை, சிவப்பு இளநீர் ஒவ்வொன்றும் அதற்கான தனிச்சுவையுடன் இருக்கும். தேவை அதிகரிப்பால் விவசாயிகளை வியாபாரிகள் முன்கூட்டியே அணுக வேண்டியுள்ளது. தற்போது விவசாயிகளிடம் தரத்திற்கு ஏற்ப இளநீர் ரூ.15 முதல் ரூ.23 விலை உள்ளது. வியாபாரிகள் தரத்திற்கு ஏற்ப ரூ.25 முதல் 40 வரை விற்பனை செய்கின்றனர். மரத்தில் பறித்து விற்பனை செய்யும்வரை உள்ள செலவுகளை வியாபாரிகளே ஏற்க வேண்டி இருப்பதால் விலை உயர்வை தவிர்க்க முடியாது. பெருநகரங்களில் கூடுதல் விலை இருந்தாலும் பயன்படுத்துகின்றனர். கிராமம், நகர் பகுதிகளில் விலை உயர்வால் விற்பனை மந்தமாகவே உள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை