மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்
05-Feb-2025
மேகமலையின் அடிவாரத்தில் சின்னமனுார் நகராட்சி அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பினால் ஈரப்பதம் இல்லாத வெப்பம் நிறைந்த காற்று வீசுவது தொடர்கிறது. நகரில் சேகரமாகும் குப்பை, கழிவுகளை ஆங்காங்கே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது. சிலர் குப்பையை நீர்நிலைகளில் வீசி வருவதால் அவை மாசடைகின்றன. வீடுகளின் அருகே உள்ள இடங்கள், மாடிகளில் காய்கறித் தோட்டங்கள், மூலிகைச் செடிகளை அமைக்க நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்நகரில் அனைத்து தெருக்களிலும் மரங்கள் இன்றி வெறுமனே உள்ளன. பள்ளி வளாகத்தில் 'குறுங்காடு' உருவாக்கப்பட்டு, அதில் செழிப்பான மரங்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு உள்ளன. அதில் வேம்பு, புங்கன், மருதம், மா, கொய்யா, எலுமிச்சை, நாரத்தை, பூவரசு, தென்னை, பாதாம், நெல்லி, வில்வம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளன. இதை தவிர்த்து அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப், வனத்துறை உதவியுடன், 'குறுங்காடு' அமைக்கப்பட்டு உள்ளன.இந்நகரின் 27 வார்டுகளையும் பசுமையாக்க ரோட்டரி சங்கம் உள்ளிட்ட சில தன்னார்வல அமைப்புக்கள் முன் வந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு நகராட்சியின் 2 பூங்காக்களில் மரக்கன்றுகள் நட்டு, மரங்களாக செழித்து வளர்ந்துள்ளன. சின்னமனுாரில் வாரச்சந்தை வளாகம், பொன்னகர் செல்லும் வீதி, ஊராட்சி ஒன்றிய அலுவலக வீதி, ஹைவேவிஸ் ரோடு, புதிதாக உருவாகி உள்ள விரிவாக்க பகுதிகள் என நகரின் பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க நகராட்சி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழிப்புணர்வு பிரசாரம் துர்கா வஜ்ரவேல், ரோட்டரி கிளப், சின்னமனுார்: வீடுகளில் கிடைக்கும் சிறிய இடங்களில் கூட மரக்கன்றுகள், மூலிகைச் செடிகள் வளர்க்க வேண்டும். அப்போது தான் நமது சந்ததியினர் நல்ல காற்றை சுவாசிக்க முடியும். பள்ளி, கல்லுாரிகளில் மரங்களின் நன்மை பற்றி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் விளக்கிக் கூற வேண்டும். இங்குள்ள கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் குறுங்காடு, காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர். ரோட்டரி கிளப் மூலம் அரசு மருத்துவமனையில் 'குறுங்காடு' அமைத்துள்ளோம். மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும், அதற்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறோம். மேலும் அந்த பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கவும் ரோட்டரி கிளப் சார்பில் திட்டமிட்டு உள்ளோம்.', என்றார்.
சிவராம், சட்டக்கல்லுாரி மாணவர், சின்னமனுார்: சூழல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தான் மரங்கள் வளர்ப்பது அவசியமாகிறது. வீடுகளில் காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் அமைக்க வேண்டும். துாதுவளை, இலை, வேர், விதை என அனைத்து மருத்துவத்திற்கு பயன்படும் சிறியா நங்கை, கீழாநெல்லி, பெரியா நங்கை உள்ளிட்ட மூலிகைகளை நடவு செய்யலாம். சிறு, சிறு உடல் உபாதைகளுக்கு மூலிகைகளை நாமே பயன்படுத்தலாம். தோட்டக்கலைத் துறை சார்பில் பழ மரக் கன்றுகள் மூலிகை செடிகள் மானிய விலையில் தருகின்றனர். அவற்றை வாங்கி பயன்படுத்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வில் மண்ணின் வளம் எவ்வாறு மாசுபடுகிறது என்பதை விளக்கிக் கூற வேண்டும்., என்றார்.
05-Feb-2025