தேனீ வளர்ப்பு பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டி மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் நிலக்கடலை, கிழங்கு, மக்காச்சோளம், நெல் ஆகியவை சாகுபடி செய்து வருகின்றனர். உப தொழிலாக ஆடுகள், நாட்டுக்கோழி, தேனீக்கள் வளர்ப்பு செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சந்தன மலைப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது. மலைப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்கு இறங்கி வரும் கரடிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சமீப காலமாக விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பு பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள் தேன் அடைகளையும் தின்று விடுகிறது. இதனால் தேன் உற்பத்தி பாதிப்படைகிறது.விவசாயி சுந்தர் கூறியதாவது: தேனீக்கள் வளர்ப்பு பெட்டிகளைதரைப்பகுதியில் இருந்தால் கரடிகள் உடைத்து சேதப்படுத்துகிறது. மரங்களில் குறிப்பிட்ட உயரத்தில் வைத்தாலும் சேதப்படுத்துகிறது. விவசாயிகள் வளர்க்கும் நாட்டுக்கோழிகள், ஆடுகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரடிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த வனத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். கரடிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.