பா.ஜ., கூட்டணி கட்சிகள் தேசியக்கொடி ஊர்வலம்
ஆண்டிபட்டி, : பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்திய ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமர் மோடியை பாராட்டியும் ஆண்டிபட்டியில் பா.ஜ., அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் சென்றனர். ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய ஊர்வலத்தில் பா.ஜ.,நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். மத்திய அரசு வழக்கறிஞர் குமார் முன்னிலை வகித்தார். பா.ஜ.,மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமன் துவக்கி வைத்தார். 50க்கும் மேற்பட்டவர்கள் தேசியக்கொடி ஏந்தி மெயின்ரோடு வழியாக சென்ற ஊர்வலம் தெப்பம்பட்டி ரோடு அருகே முடிந்தது. நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி சார்பில் செல்வம், தமிழ் தேசிய பா.பி.,மாவட்ட செயலாளர் பரத், தென்னிந்திய பா.பி.,மாவட்ட செயலாளர் வேல்முருகன், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மண்டல பொது செயலாளர்கள் ஆறுமுகம், சுரேஷ், முன்னாள் மண்டல தலைவர் விமல் உட்பட பல செய்திருந்தனர்.