மேலும் செய்திகள்
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
24-May-2025
தேனி: சமூக வலைதளங்களில் உலா வரும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.தற்போது பள்ளி, கல்லுாரிகள் கோடை விடுமுறைக்குப்பின் துவங்கி உள்ளன. மாணவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்கு கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், தனியார் நிறுவனத்தின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சில விபரங்கள் பகிரப்படுகிறது. பணம் பறிக்கும் கும்பல் பற்றி அறியாத சில மாணவர்கள் அந்த 'லிங்குகளில்' விபரங்களை உள்ளீடு செய்கின்றனர். இதனால் மாவட்டத்தில் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். உதவித்தொகை விண்ணப்பிப்பதாக நினைத்து ரூ.8ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரை இழக்கின்றனர். சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் சமூக வலைதளங்களை பார்த்து உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணைய முகவரி பற்றி அறிந்திருக்க வேண்டும். விண்ணப்பித்த பின் க்யூ.ஆர்., கோடு அனுப்பி ஸ்கேன் செய்ய கூறினால் அதனை தவிர்க்க வேண்டும். உதவித்தொகை, பணம் பெறுவதற்கு ஸ்கேன் செய்ய தேவையில்லை. பணம் அனுப்புவதற்கு மட்டுமே ஸ்கேன் செய்ய வேண்டும்', என்றனர்.
24-May-2025