உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்தால் பாலம் கட்டுமான பணியில் தாமதம்

வைகை ஆற்றில் தொடர் நீர்வரத்தால் பாலம் கட்டுமான பணியில் தாமதம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி தாலுகா நடுக்கோட்டை, பெரியகுளம் தாலுகா ஏ.வாடிப்பட்டி ஆகிய கிராமங்களை இணைக்க வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. கடந்த சில மாதங்களாக வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நீர் செல்வதால் பாலம் கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.ஆண்டிபட்டியில் இருந்து மூணாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை, காமாட்சிபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, ராம்நாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, பழைய வத்தலகுண்டு வழியாக வத்தலகுண்டு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. 32 கி.மீ., தூரம் உள்ள இந்த ரோடு வழியாக டவுன் பஸ்சில், ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்ல 90 நிமிடங்கள் ஆகும். ராம்நாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, பகுதிகளில் ரோடு குறுகலாக இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பலருக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இந்த ரோட்டிற்கு மாற்றாக ஆண்டிபட்டியில் இருந்து வத்தலகுண்டு செல்வதற்கு புதிய ரோடு அமைக்க இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். புதிய ரோட்டில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு ஜூன் 22ல் தொடங்கியது. பாலம் கட்டும் பணியை டிசம்பரில் முடிக்க திட்டமிட்டு இருந்தனர். கடந்த சில மாதங்களாக வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் தொடர்ந்து நீர் செல்வதால் பாலம் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானப் பணிகள் முடிந்தபின் ஆண்டிபட்டியில் இருந்து நடுக்கோட்டை, ஏ.வாடிப்பட்டி, விராலிப்பட்டி, பழைய வத்தலக்குண்டு வழியாக 22 கி.மீ., தூரத்தில் வத்தலகுண்டு செல்ல முடியும். இதனால் 10 கி.மீ., தூரம் சுற்றிச்செல்வது குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை