அமைச்சுப் பணியிடங்களுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு; 21 ஆண்டுகளாக தேனி மருத்துவக் கல்லுாரி பணிகள் பாதிப்பு
தேனி: தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கூடுதல் அமைச்சுப் பணியிடங்களுக்கான அனுமதி 21 ஆண்டுகளாக வழங்காமல் மருத்துவக் கல்வி இயக்குனரகம் இழுத்தடிப்பதால் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2004 டிச.8ல் இம்மருத்துவக் கல்லுாரி துவங்கப்பட்டது. அப்போது பழைய அரசு மருத்துவமனை பணியாளர் விதிப்படி ஒரு அலுவலக கண்காணிப்பாளர், 2 உதவியாளர்கள், ஒரு பதிவுறு எழுத்தர் பணியிடங்களுக்கான அனுமதியை மருத்துவக் கல்லுாரி இயக்குனரகம் அனுமதித்தது. அப்போது 100 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கல்லுாரியாக இருந்தது. தற்போது 1176 படுக்கை வசதி கொண்டுள்ளது. 21 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூடுதலாக ஒரு பணியிடத்திற்கு கூட அனுமதி வழங்கவில்லை. மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் பணியாளர்கள் விதிமுறைப்படி மருத்துவக் கல்லுாரிக்கு ஒரு நிர்வாக அலுவலர், உதவி நிர்வாக அலுவலர்கள் இருவர், கண்காணிப்பாளர்கள் நால்வர், உதவியாளர்கள் 16 பேர் என மொத்தம் 23 பணியிடங்களும், மருத்துவமனைக்கு ஒரு நிர்வாக அலுவலர், 2 உதவி நிர்வாக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் நால்வர், உதவியாளர்கள் 8 பேர் என மொத்தம் 15 பணியிடங்களுக்கான அனுமதி என சமீபத்தில் இயக்குனரகம் அனுமதி வழங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவங்கிய தேனி மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு பணியிடங்களுக்கான அனுமதி வழங்காமல் 21 ஆண்டுகள் இழுத்தடிப்பதால் வளர்ச்சி பணிகளின் வரவு, செலவுகள், கோப்புகளின் உண்மைத் தன்மையை ஆராய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பதிவுறு எழுத்தர் ஒருவர் ரூ.85 லட்சம் மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமானது. இம்மாதிரியான முறைகேடுகளை தவிர்க்கவும், திருப்பூரில் இருந்து வேறு மாவட்டங்களில் இருந்து அயல் பணியில் பணியாற்றுபவர்களை, அந்தந்த பணியிடங்களுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. பாக்ஸ் மேட்டர்: ‛யானைப்பசிக்கு சோளப்பொறி ' தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 75 ஆய்வக தொழில்நுட்பர் பணியிடங்கள் தேவை. ஆனால் 2 பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. தற்போது அயல் பணி, தொகுப்பூதியத்தில் 12 ஆய்வக தொழிநுட்பர்கள் மட்டுமே உள்ளனர். மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் இதுவரை மூன்று முறை இயக்குனரகத்திற்கு பணியாளர் நியமனத்திற்கு அனுமதி வழங்க கோரி கருத்துரு அனுப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பணியிடங்களை முறைப்படுத்தினால் சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவ வசதி எளிமையாகவும், விரைவாகவும் கிடைக்கும். இப் பிரச்னை மீது அமைச்சர் சுப்பிரமணியன் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.