தகுதியுள்ள பேரூராட்சிகளை சிறப்பு நிலையில் தரம் உயர்த்த கோரிக்கை
கம்பம் : ''மாநிலத்தில் தகுதியுள்ள பேரூராட்சிகளை சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.'' என, தமிழக அரசுக்கு பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில், இரண்டாம் நிலை, முதல் நிலை, தேர்வு நிலை, சிறப்பு நிலை என வகைப்படுத்தி உள்ளனர். இரண்டாம் நிலையில் இருந்து பணியாற்றிய பின்னர் படிப்படியாக அனைத்து நிலை பேரூராட்சிகளிலும் பணியாற்றும் செயல் அலுவலர்களுக்கு மட்டுமே, உதவி இயக்குநர் பதவி உயர்வு கிடைக்கும். தேனி மாவட்டத்தில் கடந்தாண்டு வரை சிறப்பு நிலை பேரூராட்சி ஒன்று கூட இல்லாத நிலை இருந்தது. சிறப்பு நிலை இல்லாததால், பேரூராட்சிகளில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் சிறப்பு நிலை பேரூராட்சியில் பணியாற்ற தொலை துார மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை நெருங்குவதால், பெரும்பாலானோர் பதவி உயர்வே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. செயல் அலுவலர்கள் சிலர் கூறுகையில், ''தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன. இரண்டாம் நிலை 59, முதல் நிலை 190, தேர்வு நிலை 179, சிறப்பு நிலை 62 என உள்ளது. தமிழகம் முழுவதுமே சிறப்பு நிலை பேரூராட்சிகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான செயல் அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னரே ஓய்வு பெறும் நிலை உள்ளது. எனவே அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் சிறப்பு நிலை பேரூராட்சிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'', என்றனர்.