சிலமலை -- மல்லிங்காபுரம் பாதையில் பாலம், ரோடு வசதி இன்றி சிரமம்
போடி:போடி அருகே சிலமலையில் இருந்து மாற்றுப் பாதையாக மல்லிங்காபுரம் செல்லும் ரோட்டில் பாலம், ரோடு வசதி இன்றி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அருகே சிலமலையில் இருந்து ராசிங்காபுரம், டொம்புச்சேரி செல்லும் ரோட்டில் 3 கி.மீ., தூரத்தில் அமைந்து உள்ளது மல்லிங்காபுரம்.சிலமலையில் இருந்து மாற்றுப் பாதையாக ஒன்றரை கி.மீ., தூரத்தில் மல்லிங்காபுரம் உள்ளது. இதனால் ஒன்றரை கி.மீ., தூரம் சுற்றிச் செல்வது தவிர்க்கப்படுகிறது.சிலமலையில் இருந்து மல்லிங்காபுரத்திற்கு குறிப்பிட்ட தூரம் மட்டுமே ரோடு வசதி உள்ளது. அதன் பின் ரோடு, பாலம் வசதி இன்றி குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வரவும், மாணவர்கள் சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வர சிரமம் அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிலமலை - மல்லிங்காபுரம் இணைப்பு பாதையில் ரோடு, பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.