உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வருஷநாடு அருகே நில தானக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

வருஷநாடு அருகே நில தானக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஆண்டிபட்டி : வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோயில் பகுதியில் ஏற்கனவே இரு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக 18 வரிகள் கொண்ட நில தானக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தொல்லியல் ஆய்வாளர்கள் ஆசிரியர்கள் செல்வம் பழனி முருகன் ஜெயலட்சுமி ஆகியோர்கள் தொடர்ச்சியான தேடலில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நில தான கல்வெட்டு தற்போது 3வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில் ''நாயனார் திருப்பள்ளி அறை நாச்சியாருக்கு தொண்டைமானார் தேவியார் தேவனாழவிளன் பெற்ற நாச்சியார் திருப்படி மாற்றுக்கு விட்ட நிலம் பெற்றான் வாய்க்கால் நிலம் காலும் அருக வடிக்கால் நிலம் ஒருமா வரையும் ஆக நிலவ...''. என எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டு குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: தங்கம்மாள்புரத்தில் தற்போது பொட்டியம்மன் கோயில் இருக்கும் பகுதியில் பெரிய அளவிலான சிவன் கோயில் இருந்துள்ளது. அங்கு இருந்த பள்ளி அறையில் உள்ள இறைவி நாச்சியாருக்கு, தொண்டைமானாரின் மனைவி தேவனாழவிளன் நாச்சியார் தினமும் திருவமுது படைப்பதற்கு தானம் செய்த நிலத்தைப் பற்றிய செய்திகளை கூறும் கல்வெட்டு இது. கல்தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் மேலும் கீழும் சிதைந்த நிலையில் நடுப்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. 18 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில் கடைசி இரண்டு வரிகள் வாசிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் தொண்டைமானார் என்பவர்கள் பாண்டிய மன்னர்களின் வள நாடுகளை நிர்வாகம் செய்தவர்கள். ஒரு கால் என்பது 1/4 வேலி வாய்க்கால் நிலம். தமிழர் அளவீட்டு முறைகளின் படி, ஒரு மாவரை என்பது ஒருமா + அரை மா (இரு மாகாணி). ஒரு காணி என்பது 1.32 ஏக்கர். எனவே வடிகால் நிலம் மட்டும் 3.96 ஏக்கர் இக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் மூலம் இப்பகுதியில் பாண்டியர்களின் ஆட்சி செழித்து வளர்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அல்லது அயலவர் படையெடுப்பின் காரணமாக இக்கோயில் சிதைக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ