உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெற் பயிருக்கு நிவாரணம் குறைத்து  வழங்குவதால் அதிருப்தி * குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

நெற் பயிருக்கு நிவாரணம் குறைத்து  வழங்குவதால் அதிருப்தி * குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

தேனி: ‛‛டெல்டா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்க்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கிவிட்டு, தேனியில் விவசாயிகளுக்கு ரூ.17,500 அறிவித்திருப்பது வேதனை அளிப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். தேனியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி (வேளாண்), ஸ்ரீவி.,மேகமலை புலிகள் காப்பக உதவி வனக்காப்பாளர் சாய்சரண்ரெட்டி, கால்நடைதுறை இணை இயக்குனர் கோயில்ராஜா, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: பாண்டியன், தலைவர், மாவட்ட விவசாயிகள் சங்கம்; பொதுப்பணித்துறை நிர்வகிக்கும் கண்மாய்களின் ஆக்கிரமிப்பு அகற்றாததால் மழைநீரை சேமிக்க முடியாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றிய முழுமையான விபரம் அளிக்க வேண்டும். வைகை அணையில் வண்டல் மண் எடுக்க துார்வார அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.கலெக்டர்: ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தொடரும்.சீனிராஜ், மாவட்டத் தலைவர், தமிழக தேசிய விவசாயிகள் சங்கம்: மழை வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆனால் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் தேனி மாவட்டத்தில் யாரும் சேதங்களை ஆய்வு செய்ய வர வில்லை. மாறாக நிவாரணத்தை ஏக்கருக்கு 17,500 வழங்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது நியாயமில்லை. கலெக்டர்: தமிழக முதல்வர் அனைத்து கலெக்டர்களிடம் ஆன்லைன் கூட்டத்தில் பேசி சேத விபரங்களை கேட்டு நிவாரணம் வழங்க அறிவுறுத்தினார். நல்லையம் பெருமாள், தலைவர், சின்னமனுார்: சின்னவாய்க்கால் ஆக்கிரமிப்புக்களை அகற்றி பலமிழந்த கரைகளை பலப்படுத்த வேண்டும். சாகுபடி பாதித்து நஷ்டம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றி, நடைபாதையை மீட்டு தர வேண்டும்.கலெக்டர்: ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.கண்ணன், மாவட்டச் செயலாளர், அனைத்து விவசாயிகள் சங்கம்: 58 கால்வாயில் நீர் திறக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டிபட்டியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். இணை இயக்குனர் : நடவடிக்கை எடுக்கப்படும்.பரமசிவம், பொம்மையக்கவுண்டன்பட்டி: அல்லிநகரம் சிகுஓடை கண்மாய்க்கு நீர்வரத்து பாதையை விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் டிராக்டர் செல்ல முடியவில்லை. இதனால் சிகுஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பாக்ஸ் மேட்டர்: டி.ஆர்.ஓ.,விற்கு கலெக்டர் கண்டிப்பு குள்ளப்புரத்தில் குவாரிக்கு புதிதாக கனிமவளத்துறை அனுமதி வழங்கி உள்ளது. அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினார். இதுகுறித்து கனிம வளர்த்துறை ஆர்.ஐ., பொன்கூடலிங்கம் அளித்த பதிலில் திருப்தி அடையாத கலெக்டர் , டி.ஆர்.ஓ.,வை பார்த்து ,' ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கூறி ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நீங்கள் பணியாற்றவில்லை என்றால் நானும், சப்கலெக்டரும்தான் ஆய்வுக்கு போக வேண்டும். வேண்டும் என்றால் உங்கள் சம்பளத்தை எனக்கு தந்துவிடுகிறீர்களா ', என கண்டித்தார். பின் மேடைக்கு வந்த டி.ஆர்.ஓ, மகாலட்சுமியை ஆய்வுக்கு செல்லாத காரணம் என்ன என்று கடுமையாக மேடையிலேயே கண்டித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை