| ADDED : மார் 15, 2024 01:48 AM
தேனி:ரஷ்யா, உக்ரைன் போர் நடந்த நாடுகளுக்கு வெள்ளரிக்காய் ஏற்றுமதி செய்த பணம் கிடைக்காமல், கடனாளி ஆன விரக்தியில் ரஷ்யாவில் படித்த டாக்டர் நாட்ராஜ்குமார் 44, துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேனி மாவட்டம், கம்பம், சுக்காங்கல்பட்டி தெரு நாட்டுத்துரை மகன் நாட்ராஜ்குமார் 44. இவர் ரஷ்யாவில் மருத்துவம் படித்து அங்கு மரியா என்ற பெண்ணை 21 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். மாஸ்கோவில் கிளினிக் நடத்தினார். ஏழு ஆண்டுகளுக்கு முன் கம்பத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மனைவி மரியா, 5 பிள்ளைகளுடன் வந்தனர். நாட்ராஜ்குமார் வெள்ளரிக்காயை ரஷ்யா, உக்ரைன், எகிப்து நாடுகளுக்கு ஏற்றுமதி தொழில் செய்துவந்தார். அந்நாடுகளில் போர் காரணமாக ஏற்றுமதி செய்த வெள்ளரிக்காய்க்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் வெள்ளரிக்காய் வழங்கிய விவசாயிகளுக்கு நிதிநிறுவனத்தில் கடன் பெற்று பணம் வழங்கினார். தாய், தந்தை சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் மார்ச் 13ல் வீட்டில் உள்ள அறையில் துாக்கில் தொங்கினார். அவரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இறக்கி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். டாக்டர் இறப்பு குறித்து கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.