உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வறட்சியால் கால்நடைகளின் தீவனத்திற்கு தட்டுப்பாடு

வறட்சியால் கால்நடைகளின் தீவனத்திற்கு தட்டுப்பாடு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடைகளின் தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆண்டிபட்டி தாலுகாவுக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள், நாட்டு மாடுகள், செம்மறி, வெள்ளாடுகள் அதிகம் உள்ளன. கறவை மாடுகளை பெரும்பாலும் வீடு அல்லது தோட்டங்களில் கட்டி வைத்து தீவனம் கொடுத்து பராமரிக்கின்றனர். நாட்டு மாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் அன்றாடம் மேய்ச்சலுக்காக பல்வேறு இடங்களுக்கு ஓட்டிச் செல்லப்படுகின்றன. ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. காற்றின் வேகமும் அதிகம் இருப்பதால் ஈரப்பதம் குறைந்து வறட்சி அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மழையும் இல்லை. இதனால் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து விட்டன. நாட்டு மாடுகள், ஆடுகளை தினமும் பல கி.மீ., தூரம் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று திரும்புகின்றனர். இயற்கை தீவனம் குறைந்துள்ளதால் கறவை மாடுகள் வளர்ப்பவர்களும் தீவனத்திற்காக கூடுதலாக செலவு செய்கின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் தேவைக்கேற்ப வெளியூர்களில் இருந்து தற்போது தீவனத்தை விலைக்கு வாங்கி இருப்பில் வைத்து பயன்படுத்துகின்றனர். அடுத்தடுத்து மழை பெய்தால் மட்டுமே தற்போது நிலவும் தீவன தட்டுப்பாடு நீங்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி