மேலும் செய்திகள்
டூவீலர் மீது பஸ் மோதி இளைஞர் பலி
19-Jan-2025
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லவருப்பன்பட்டியில் சாக்கடை வசதி இன்றி திறந்த வெளியில் கழிவுநீர் செல்வதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் அவ்வப்போது காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.சில்வார்பட்டி ஊராட்சியில் நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, சமத்துவபுரம், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு 12 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் 'ராணுவ கிராமம்' என அந்தஸ்தை பெற்ற நல்லகருப்பன்பட்டியில் சுதந்திர போராட்டம் முதல் தற்போது வரை ஏராளமானோர் ராணுவத்தில் பணியில் உள்ளனர். இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிக பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு ரோடு, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் போதியளவில் இல்லை. வடுகபட்டி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 4.50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் குடிநீர் வாரியம் 1.50 லட்சம் லிட்டர் மட்டுமே வழங்குகிறது. ஊராட்சி குடிநீர் தேவையை சமாளிக்க சிறுகுளம் கண்மாயில் 14 போர்வெல் அமைத்து உவர்ப்பு நீர் இரு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. கோடை காலம் துவங்குவதற்குள் குடிநீர் வாரியம் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். நல்லகருப்பன்பட்டி ஜெயமங்கலம் இணைப்பு ரோடு மண் ரோடாக உள்ளது. தார்ரோடு அமைக்க கோரி பல கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நிறைவேறவில்லை. இப் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். சாக்கடை வசதியின்றி கழிவுநீர் தேக்கம்
வெங்கடேசன், முன்னாள் வார்டு உறுப்பினர், நல்லகருப்பன்பட்டி: நல்லகருப்பன்பட்டியில் வடக்கு காலனியில் சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசு தொல்லை உள்ளது. சமத்துவபுரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் திருட்டு நடக்கிறது. வீராச்சாமி நகர் ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் ரோடு, இரு புறமும் சாக்கடை கட்டும் பணி நடக்காமல் உள்ளது. மழை காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நல்லகருப்பன்பட்டி சிறுகுளம் வாய்க்காலை கடந்து தான் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியும். மழை காலங்களில் இந்த வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அப்போது இடு பொருட்கள் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்த வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை
மீனா, வடக்கு தெரு, நல்லகருப்பன்பட்டி: நல்லகருப்பன்பட்டியில் இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்கின்றனர். இதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்த நீரை முழுமையாக வழங்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஆழ்துளை குழாய் நீரை பயன்படுத்துகின்றோம். தினமும் குடிநீர் வழங்க வேண்டும். சுடுகாட்டிற்கு தண்ணீர் சுமந்து செல்லும் நிலை
குமரேசன், தெற்கு தெரு, நல்லகருப்பன்பட்டி: சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லை. இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு குடத்தில் தண்ணீர் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுடுகாட்டில் போர் அமைத்து தண்ணீர் வசதி செய்திட வேண்டும். அங்கன்வாடி மையம் முன்பு திறந்தவெளியில் சாக்கடை செல்கிறது. இதனால் சிறுவர்கள், சிறுமிகள் சாக்கடையை தாண்டி செல்ல சிரமம் அடைகின்றனர். திறந்த வெளி சாக்கடையால் கழிவுநீர் தேங்குவதில் கொசு உற்பத்தியாக தூக்கத்தை தொலைத்து விட்டோம். கொசு மருந்து அடிக்க வேண்டும். இங்கு ஒன்றிய அலுவலகத்திலிருந்து சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைத்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
19-Jan-2025