உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையை துார்வார அரசு அனுமதி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

வைகை அணையை துார்வார அரசு அனுமதி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தேனி: வைகை அணையை துார்வார அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு 2 வாரங்களில் பணிகள் நடக்க உள்ளன,' என தேனியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார். குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி (வேளாண்), தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:பாண்டியன், விவசாயி, பெரியகுளம்: விவசாயிகளுக்கு மழை மானிகள், வெப்ப அளவீடுகளை குறிக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட விபரங்கள் தெரிவிக்க வேண்டும்.பாலசண்முகம், தாசில்தார்: மாவட்டத்தில் ஏற்கனவே 13 மழை மானிகள் இருந்தன. தற்போது தானியங்கி மழைமானி கருவிகள், வெப்ப நிலை கண்டறியும் நிலையம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மழை மானி பொருத்தப்பட்டு 31 இடங்களில் இருந்து மழை பொழிவு விபரம் எடுக்கப்படுகின்றன. விரைவில் தினமும் வெப்ப நிலை, மழையளவின்விபரங்கள் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். இவை 10 சதுர கி.மீ., பரப்பளவை கணக்கிட்டு, மத்திய நீர்வளத்துறை அமைக்கப்பட்டுள்ளது.கண்ணன், விவசாயி, ஜெயமங்கலம்: ஜெயமங்கலத்தில் மின்ஓயர் வீடுகளுக்கு மேல், விளை நிலங்களுக்குள் இடையூறாக செல்கிறது. மின்வாரிய செலவில் இதை மாற்றி அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவில் அரசு வழிகாட்டியுள்ளது. ஆனால் மின்வாரியம் இதை கண்டு கொள்ளாமல் விவசாயிகளை கட்டணம் செலுத்தக்கூறுவுது அரசின் உத்தரவை மீறிய செயலாகும்.விஜயா, உதவி செயற் பொறியாளர்: மின்வாரியத்தின் உத்தரவுப்படி கட்டணம் செலுத்தி மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.சீனிராஜ்: மின் இணைப்பு பெற தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திவிட்டு விவசாயிகள் காத்திருக்கின்றனர். காலதாமதம் இன்றி இணைப்பு வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். மேலும் அக்., 2ல் பி.டி.ஆர்., பெரியார் கால்வாயில் ஒரு போக சாகுபடிக்கான தண்ணீர் திறந்துவிட கலெக்டர் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்தது. காலதாமதம் இன்றி திறந்துவிட வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

கலெக்டர்: விவசாயிகளின் நீண்ட கோரிக்கையை ஏற்று அரசு வைகை அணையை துார்வார அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓரிரு வாரங்களில் பரிட்சார்த்த முறையில் அதற்கான பணிகள் துவங்க உள்ளன. மேலும் மாவட்டத்தில் 170 சிறு குறு கண்மாய்களின் வண்டல் மண் எடுப்பதற்கும், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையிலும் அனுமதி அளிக்கப்பட உள்ளன. நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வடுகபட்டி, கெங்குவார்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

கேரள வனத்துறைக்கு எப்படி அனுமதி

ஆண்டன்பாலசிங்கம்: முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் முல்லைக்கொடி பகுதியில் தேனி மாவட்ட நிர்வாகத்தின் மழையளவு மானி பொருத்தப்பட்டு உள்ளது. அதன் விபரங்களை அறிய தமிழக அதிகாரிகள் செல்ல கேரள அரசு தடை விதித்துள்ளது. ஆனால் முல்லைப் பெரியாறு அணையின் கிழக்கு மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு வனத்துறைக்கு கட்டுப்பட்ட பெரியாறு புலிகள் காப்பகத்தின் வெள்ளிமலை வழியாக மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி தடை உள்ளது. ஆனால் வெள்ளிமலை வழியாக தாண்டிக்குடி செல்ல கேரள வனத்துறைக்கு எதன் அடிப்படையில் வனத்துறை அனுமதி வழங்குகிறது. தமிழ்நாடு அரசு, தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு வனத்துறை, பொதுப்பணித்துறை தகவல் அளித்திருக்கிறதா விளக்கம் தர வேண்டும்.கலெக்டர்: இதுகுறித்து வாகன எண் விபரங்கள், எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்தார். துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி