| ADDED : ஜன 22, 2024 05:52 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டிப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பன்னீர் ரோஜா பூக்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் இறவை பாசன நிலங்களில் காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் மாற்று பயிராக பூக்கள் சாகுபடி செய்கின்றனர். பூக்கள் சாகுபடியில் சீரங்காபுரம், அய்யணத்தேவன்பட்டி, புதூர், டி.வி.ரங்கநாதபுரம், அய்யர்கோட்டம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடி செய்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் இருந்து பன்னீர் ரோஜா கன்றுகள் வாங்கி வரப்பட்டு நடவு செய்து பராமரித்தோம். நடவு செய்த இரு மாதங்களில் பூக்கள் பறிக்க முடியும். தேவையான உரமிட்டு, மருந்து தெளித்து முறையாக பராமரித்தால் ஒரு ஏக்கரில் தினமும் 50 முதல் 70 கிலோ பூக்கள் எடுக்க முடியும். நள்ளிரவில் பூக்கள் பறித்து அதிகாலையில் மார்க்கெட் கொண்டு சென்றால்தான் விலை கிடைக்கும்.பூக்கள் பறிப்புக்கான செலவுத்தொகை அதிகமாகிறது. தற்போது பூக்களுக்கான தேவை அதிகம் இருப்பதால் கிலோ ரூ.200 வரை விலை உள்ளது. சாதாரண நாட்களிலும் கிலோ ரூ.50க்கும் குறையாது. ஆண்டு முழுவதும் செடிகளில் பூக்கள் பறிக்க முடியும். செடிகளில் பூக்கள் எண்ணிக்கை குறைந்ததால் கவாத்து செய்துவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.