| ADDED : ஜன 18, 2024 06:11 AM
சின்னமனூர் : பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய செங்கரும்பிற்கு பட்டுவாடா இன்னும் வழங்காததால் விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, செங்கரும்பு ஒன்று, ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சின்னமனூர், தேனி, பெரியகுளம் ஆகிய மூன்று ஊர்களில் விவசாயிகளிடமிருந்து செங்கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு கரும்பின் விலை ரூ.33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . வெட்டு கூலி, ஏற்றி இறக்கும் கூலி போன்றவைகள் அதில் அடக்கம்.கடந்தாண்டு செலவு போக ஒரு கரும்பிற்கு ரூ.25 வரை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.இந்தாண்டும் கொள்முதல் விலை ரூ. 33 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற கரும்புகள் கொள்முதல் செய்ததாக கூறி கலெக்டர் ஷஜீவனா , கூட்டுறவு இணை பதிவாளருக்கு 'மெமோ' கொடுத்துள்ளார்.இந் நிலையில் செங்கரும்பிற்கான பட்டுவாடா எப்போது மேற்கொள்ளப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மாவட்டத்தில் 4.30 லட்சம் ஆயிரம் செங்கரும்பு கொள்முதல் செய்துள்ளனர்.