உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்குவாரிகள் இயக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கல்குவாரிகள் இயக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி : ''குள்ளப்புரம் அருகே 13 குவாரிகள் இயங்குவதால் 63 ஏக்கரில் சாகுபடியாகும் பயிர்கள் பாதித்து நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இதனால் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி கல்குவாரிகள் இயங்க தடை விதிக்க வேண்டும்.'' என தேனி டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, நேர்முக உதவியாளர் (வேளாண்) பிற துறை அதிகாரிகள், அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சேகர், குள்ளப்புரம்: குள்ளப்புரம் ஊராட்சியில் 70 ஏக்கரில் வேளாண் சாகுபடி நடக்கிறது. தென்னை, வாழை, காய்கறி பயிர்கள் சாகுபடியாகின்றன. அங்குள்ள 13 கல்குவாரிகளால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனிமவளத்துறை உதவி இயக்குனர் நேரடி ஆய்வு செய்ய வேண்டும். சாகுபடிக்கு பாதிப்பு இருக்கும் என தெரிந்தே கண்ணியாமங்கலம் செல்லும் பிரதான ரோட்டில் புதிய கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே, மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி கல்குவாரிகள் நடத்த தடை விதிக்க வேண்டும். டி.ஆர்.ஓ.,: குள்ளப்புரத்தில் விவசாயிகள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, கலெக்டரின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வெற்றிவேல், அகமலை: சட்டசபையில் போடி எம்.எல்.ஏ., 'சோத்துப்பாறை முதல் அகமலை வரை ரோடு அமைக்க நிதி ஒதுக்ககோரினார். அமைச்சர் நிதி ஒதுக்கப்படும் என பதில் அளித்தார். மூன்றாண்டுகள் முடிந்த பின்பும் பணிகள் நடக்காமல் உள்ளது. டி.ஆர்.ஓ.,: இதனை ஆய்வு செய்து பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும். சமேளன், தப்புக்குண்டு: தேக்கம்பட்டி முதல் தப்புக்குண்டு வரை மின் உயர் கோபுரங்கள் எங்கள் நிலத்தில் அமைக்கப்பட்டது. இதற்கான மின்வாரியத்தினர் ரூ.10 லட்சம் பேசிவிட்டு, முதலில் ரூ.3 லட்சம், அதன்பின் ரூ.40 ஆயிரம் வழங்கினர். தற்போது ரூ.6.60 லட்சம் வழங்காமல், ஒப்பந்ததாரர் மாறிவிட்டனர் என, காரணம் கூறி, இழப்பீடு தர மின்வாரியம் காலம் தாழ்த்துகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகா, மின் செயற்பொறியாளர்: ஆய்வு செய்து உரிய விதிமுறைகளின் படி இழப்பீடு வழங்கப்படும். சக்கரவர்த்தி,அகில இந்திய பார்வர்டு பிளாக்: வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று விதிமீறி பூதிப்புரம் ராஜபூபால சமுத்திரம் கண்மாய், டொம்புச்சேரி கண்மாயில் மண் அள்ளுவது தொடர்கிறது நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துமாதவன், நேர்முக உதவியாளர்: எஸ்.பி.,யிடம் நானே தெரிவித்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் ஆவேசம் கென்னடி, மலைமாடுகள் நலச் சங்கம்: 2006 வன உரிமை சட்டப்படி மலைமாடுகளுக்கு வனத்தில் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. ரேஞ்சர் சிவராம்: 2022 நீதிமன்ற உத்தரவுப்படி காப்புக்காடுகளில், புலிகள் காப்பக பகுதிகளில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி கிடையாது. மேய்த்தால் அது வனக்குற்றம். அப்போது விவசாயிகள் டி.ஆர்.ஓ., வனத்துறை ரேஞ்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இணை இயக்குனர் சமாதானப்படுத்தி, 'விவசாயிகள் இவ்வாறு நடந்துகொள்வது அநாகரீகம். ரேஞ்சர் அவரது துறையில் உள்ள விதிமுறைகள் குறித்து கூறினார். நீங்கள் ஆவேசமாக நடந்து கொள்வது அவசியமற்றது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை