மாங்காய் விலை இன்றி மரத்தில் பறிக்காமல் விடும் அவலம் விவசாயிகளுக்கு ரூ.500 கோடி இழப்பு
பெரியகுளம்: பெரியகுளத்தில் மாங்காய்க்கு உரிய விலை இல்லாததால் அறுவடை செய்யப்படாமல் மாங்காய்கள் மரத்திலே பழுத்துள்ளது. இதனால் ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் தாலுகாவில் 10 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் உள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக பெரியகுளத்தில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. 10 ஆயிரம் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மா சீசன் மார்ச்சில் துவங்கி ஜூலை கடைசி வரை அறுவடை நடக்கும். இப் பகுதியில் கல்லாமை, காசா, செந்தூரம், உட்பட பத்துக்கும் அதிகமான ரகங்கள் உள்ளது. இந்தாண்டு பருவ மழைமாற்றத்தால் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விளைச்சல் குறைவாக உள்ளது. நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனர். மாறாக எப்போதும் இல்லாத வகையில் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. என்ன காரணம்
கேரளாவில் மழை பெய்தும், தற்போது மழை குறைந்தும் சீதோஷ்ணநிலையை காரணம் காட்டி வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில் மிக குறைந்த விலைக்கு கேட்கின்றனர். கடந்தாண்டு 1 டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்ற கல்லாமை தற்போது ரூ.4000க்கும், கடந்தாண்டு ரூ.80,000 விற்ற காசாலட்டு தற்போது ரூ.25,000 கேட்கின்றனர். வீரகேசவன், தென்கரை விவசாயிகள் சங்க தலைவர்: 70 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலை பாதாளத்திற்கு சென்றது. ஒரு ஏக்கர் களை அகற்றுவது, தண்ணீர் கட்டுவது, மருந்து தெளிப்பு, அறுவடை வரை ரூ.50 ஆயிரம் செலவாகிறது. தற்போது விலையில் ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் நஷ்டமாகிறது. கடந்தாண்டு பெரியகுளத்திலிருந்து தினமும் ஆயிரம் டன் மா அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 50 டன் அனுப்பப்படும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்யாமல் மரத்திலே விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.500 கோடி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள மூவாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை உருவாகியுள்ளது. அரசு கொள்முதல் செய்யவும், இங்கு மாம்பழம் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றார்.--