| ADDED : டிச 27, 2025 05:51 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி விளைநிலங்களில் மீண்டும் சுற்றி திரியும் ஒற்றை சிறுத்தையால் விவசாயிகள், பக்தர்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐந்து நாய்களை அடித்து கொன்றது. விரைவில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலை அடிவாரத்தில் கோயில்காடு, அத்திமுருகு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா,தென்னை, கரும்பு, வாழை விவசாயம் நடக்கிறது. இப் பகுதியில்உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி, மார்கழி பூஜைகளுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன் முதல் இந்தப்பகுதியில் சிறுத்தை ஒன்று தோட்டங்களில் வளர்க்கப்படும் ஆடுகள், கன்றுகுட்டிகள், நாய்கள் என முப்பதுக்கு மேற்பட்ட கால்நடைகளை கடித்துக் கொன்றது. நவ., மாதம் மானை சிறுத்தை வேட்டையாடியது. இச் சம்பவத்தால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல தயங்குகின்றனர். பக்தர்கள் அச்சம் சில தினங்களுக்கு முன்பு கிரிவலப்பாதை அருகே சிறுத்தை நின்று கொண்டிருந்தது. பக்தர்கள் இதனை கவனித்து சுதாரித்து கொண்டதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தோட்டங்களில் காவல் பணிக்காக இருந்த ஐந்து நாய்களை சிறுத்தை கடித்து கொன்றது. இந்த ஒற்றை சிறுத்தையால் விவசாயிகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்பு கொள்ள முடியவில்லை பெரியகுளம் வனத்துறை அலுவலகம் சோத்துப்பாறையில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளுடன் வனத்துறை நிர்வாகம் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். இது பெரும்பாலும் நடத்துவது இல்லை. சிறுத்தை நடமாட்டம் குறித்து கேமராவில் பதிவு இருந்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் வனத்துறை அமைதியாக உள்ளது. விவசாயிகள் புகார் தெரிவிக்க வேண்டும் என விரும்பினால் சோத்துப்பாறை பகுதியில் அலைபேசி டவர் இல்லாததால் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. முந்தைய காலங்களில் வனத்துறை அலுவலகம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி பகுதியில் இருந்தது. தற்போது சோத்துப்பாறைக்கு செல்வதற்கு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் பெரியகுளம் பகுதியில் வனத்துறை அலுவலகம் செயல்பட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.