காலி இடத்தை காவல் காக்கும் தீயணைப்புத்துறை வீரர்கள் இடம் ஒதுக்கியும் நிதி ஒதுக்காத அவலம்
தேனி: தேனியில் தீயணைப்பு நிலையம் அமைக்க 5 ஆண்டுகளுக்கு முன் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பை தவிர்க்க கூடாரம் அமைத்து இரு ஆண்டுகளாக காலி இடத்தை தீயணைப்பு துறையினர் பாதுகாத்து வருகின்றனர். தேனி பெரியகுளம் ரோட்டில் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. போதிய இடவசதி இன்றியும், ரோட்டை விட 3 அடி பள்ளத்தில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் நகர் பகுதியில் மழை பெய்தால் தீயணைப்பு அலுவலகம் நீரில் மிதக்கும். அங்குள்ள கோப்புகளை பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் தவித்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் பெருந்திட்ட வளாக பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் தீயணைப்புத் துறைக்கு மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், தீயணைப்புத்துறை இயக்குநரகம் அங்கு கட்டுமான பணிகள் கட்ட இதுவரை ஆர்வம் காட்டவில்லை. அந்த இடத்திற்கு அருகே பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்தது. இதனால் சிலர், தீயணைப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தங்கள் பட்டா நிலம் என ஆக்கிரமிக்க துவங்கினர். ஆக்கிரமிப்புகளை தவிர்க்க சிறிய தகர செட் அமைத்து வாகனம், கூடாரம் அமைந்து இடத்தை சுற்றி வேலி அமைத்தனர். விஷ ஜந்துக்களால் அச்சம் காலி இடத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க கூடாரம் அமைத்து இரவு பகலாக இரு தீயணைப்பு வீரர்கள் எந்நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் மின் வசதி இல்லாத நிலையில், கூடாரத்திற்குள் பாம்பு, தேள் உள்ளிட்டவை வருகின்றன.இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் அச்சத்துடன் பணிபுரியும் நிலை உள்ளது. அரசு கட்டுமான பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தீயணைப்புத்துறையில் பணிபுரிவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.