பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை தி.மு.க., மாஜி நிர்வாகியிடம் விசாரணை
கம்பம்:கல் குவாரி பிரச்னையில் பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தி.மு.க., 'மாஜி' நிர்வாகியிடம் போலீசார் விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி, கிழக்கு பகுதி மலையடிவாரத்தில் உள்ள கல் குவாரிகளை, மகளிர் குழுக்களுக்கு குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில், மகளிர் குழு உறுப்பினர்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. சமீபத்தில் குழு உறுப்பினர்கள் சிலர், தாங்கள் சொந்தமாக கல் உடைத்து விற்பனை செய்ய உள்ளதாக கூறியதால், இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு காமயகவுண்டன்பட்டியில், இப்பிரச்னை குறித்து பேச்சு நடந்தது. இதில், கம்பத்தில் வசித்த தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி கம்பம் நகர செயலர் சசிக்குமார், 43, பங்கேற்றார். பேச்சின் போது, சசிக்குமாருக்கும், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி, 53, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், சின்னச்சாமி கத்தியால் சரமாரியாக குத்தியதில், சசிக்குமார் பலத்த காயமடைந்தார். கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சசிக்குமாரின் உடலை வாங்க மறுத்து தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர், உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் ஆர்.டி.ஒ., -- டி.எஸ்.பி., பேச்சு நடத்தி, உடலை வாங்க செய்தனர். ராயப்பன்பட்டி போலீசார், 10 பேர் மீது வழக்கு பதிந்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீஸ் குழு, சின்னச்சாமி, தி.மு.க., தேனி தெற்கு மாவட்ட துணை செயலர் குரு இளங்கோ, 55, ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.