| ADDED : பிப் 05, 2024 01:47 AM
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி வெள்ளைப் பூண்டு சந்தையில் வடமாநில வரத்து குறைந்ததால் கிலோ ரூ.450 என, 50 ஆண்டுகளில் முதன் முதலாக பூண்டு விலை உச்சம் தொட்டுள்ளது.இச்சந்தையில் 100 வெள்ளைப் பூண்டு கமிஷன் கடைகள் உள்ளன. இவை தமிழக அளவில் பூண்டு சந்தையில் விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு விவசாயிகளில் பலர் வடுகபட்டியை பூர்வீகமாக கொண்டுள்ளனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விளையும் வெள்ளைப் பூண்டுகள் வடுகபட்டியில் உள்ள மொத்த சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.இவை வியாழன், ஞாயிற்றுக்கிழமை வெள்ளைப்பூண்டு மார்க்கெட்டில் தலா 30 டன் முதல் 40 டன் வரை விற்பனை செய்யப்பட்டு, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. விலை உயர்வு ஏன்
கடந்தாண்டு பிப்.,4ல் வட மாநிலங்களில் விளையும் தரைப்பூண்டு ரகம் கிலோ ரூ.70 முதல் ரூ.120 க்கு விற்பனை ஆனது. ஆனால் வட மாநிலங்களின் இருந்து வரத்து குறைந்ததால் நேற்று (பிப். 4ல்) முதல் ரகம் ரூ.400 முதல் ரூ.450க்கும், பச்சைப் பூண்டு (சீட் ரகம்) ரூ.300க்கும், கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு ரூ.500க்கும் விற்பனையானது.வியாபாரி முருகன் கூறுகையில், 'வட மாநிலங்களில் டிசம்பரில் பூண்டு சாகுபடி செய்துஉள்ளனர். 100 முதல் 120 நாட்களில் விளையும் பூண்டு வகைகள் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறுவடையாகும். அதுவரை வரத்து குறைவதாலும், வெள்ளைப் பூண்டின் தேவை அதிகரித்துள்ளதால் தற்போது விலை 50 ஆண்டுகளில் முதன் முதலாக அதிகரித்துள்ளது. இது பூண்டு விவசாயிகளுக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என்றார்.