அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்த 50 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை
தேனி: பழனிசெட்டிபட்டியில் அரசு தரிசு கரட்டில் ஆக்கிரமிப்பில் வீடுகட்டி குடியிருந்த 50 பேருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தில் 18.47 எக்டேரில் அரசின் புறம்போக்கு தரிசு கரடு உள்ளது. இப்பகுதியில் 2.60 எக்டேரில் அரசு நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமித்து 350 பேர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.இவர்களில் அரசு ஊழியர்கள் அல்லாத, நிலம் இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அதனை பரிசீலித்த கலெக்டர் ஷஜஷீவனா நடவடிக்கை எடுக்க உததரவிட்டார். பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புக்களை வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ் ஜன.9 முதல் ஜன.11 வரை தேனி தாசில்தார் சதீஸ்குமார் மேற்பார்வையில் ஆர்.ஐ.,க்கள், சர்வேயர்கள் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் விபரங்களை சேகரித்தனர். இவற்றில் 50 பேர் தவிர 300 பேர் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வெளியூரில் வசித்தும் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 50 பேரின் வீட்டின் அளவை கணக்கிட்டு அரசாணைப்படி படி வகைமாற்றம் செய்து, பட்டா வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதுதவிர 300 பேர் அரசின் விதிமுறைப்படி ஆக்கிரமிப்பு என்பதால் அரசு நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் பணம் செலுத்தி பின் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் தெரிவித்துள்ளார்.