உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சபரிமலையில் கனமழை; பக்தர்கள் வருகை குறைந்தது

சபரிமலையில் கனமழை; பக்தர்கள் வருகை குறைந்தது

சபரிமலை: சபரிமலையில் நேற்று கன மழை பெய்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர். மழையால் பக்தர்கள் வருகையும் குறைந்தது.தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சபரிமலையில் அதன் தாக்கம் இருக்க கூடும் என பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை வரை மழை பெய்யவில்லை. நேற்று லேசான வெயில் அடித்தது. ஆனால் மாலை 6:30 மணிக்கு பின் லேசான சாரல் மழை பெய்து இரவு வலுத்தது. நேற்று காலையிலும் சாரல் மழை தொடர்ந்த நிலையில் காலை 11:00 மணிக்கு பின் கன மழை பெய்ய தொடங்கியது.இதனால் மலையேறும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பக்தர்கள் அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர். மழையால் பாதையில் சறுக்கல் ஏற்பட்டது. எனவே பக்தர்கள் மெதுவாகத்தான் ஏற முடிந்தது. பெரிய நடைப்பந்தலில் நேற்று கியூ காணப்படவில்லை. வரும் பக்தர்கள் உடனடியாக தரிசனம் முடித்து ஷெட்டுகளில் தஞ்சம் அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க பாலிதீன் கோட் அணிந்து சன்னிதானம் வந்தனர்.சபரிமலை அமைந்துள்ள பத்தணந்திட்டை மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், 40 கி.மீ., வரை வேகத்தில் காற்று வீச கூடும் என்றும், 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று மதியத்துக்கு பின் மழை மேலும் வலுத்தது.தமிழகத்தில் புயல் காரணமாக அங்கிருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மழை தீர்ந்த பின் மற்ற நாட்களில் வரக்கூடும் என்பதால் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேவசம்போர்டு கருதுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ