தேனி : தேனியில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கரும்பாறை, கொட்டக்குடி மலைவாழ் மக்கள் இலவச வீட்டு மனைபட்டா, வீடு வழங்க கோரி மனு அளித்தனர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஷனீப், சமுக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் முரளி, பயிற்சி சப் கலெக்டர் முகமது பைசல், மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் 265 மனுக்களை கூட்டத்தில் வழங்கினர். இம் மனுவில் போடி தாலுகா கொட்டக்குடி மலைவாழ் மக்கள் சார்பாக காளீஸ்வரி, செல்லமீனா வழங்கிய மனுவில், 'கொட்டக்குடி கிராமத்தில் ஒரே வீட்டில் இரு குடும்பங்கள் வசித்து வரும் நிலை உள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.போடி தாலுகா, அகமலை, கரும்பாறை, குறவன்குழி ஊர்தலைவர் மாரியப்பன் மனுவில், 'அகமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பளியர் இன மக்கள் தோட்டங்களில் கூலித்தொழிலாளியாகவும், கொத்தடிமைகளாகவும் வாழ்ந்து வருகிறோம். இப்பகுதி மக்களுக்கு கடந்தாண்டு சோத்துப்பாறை அணைப்பகுதியில் வீடு, பட்டா வழங்க இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு உறுதியளித்தனர். ஆனால் இதுவரை வீடு கட்டித்தரவில்லை. விவசாய நில உரிமை சட்டத்தின்படி நிலம் வழங்கி உதவ கோரினர்.வைகை அணை மீன் விற்பனை செய்பவர்கள் சார்பாக வைகைபுதுார் ரூபாதேவி மனுவில், 'வைகை அணையில் மீன் வாங்கி அப்பகுதியில் விற்பனை செய்பவர்களை, வியாபாரம் செய்ய விடாமல் பொதுப்பணித்துறையினர் தடுக்கின்றனர். சிலர் மிரட்டல் விடுத்து செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க' கோரினர்.வண்ணார் எழுச்சி நலப்பேரவை மாவட்ட செயலாளர் ஈஸ்வரி மனுவில், 'தேவதானப்பட்டி அருகே தாக்குதலுக்கு உள்ளாகி 2023 செப்.,16ல் மதுரை மருத்துவமனையில் இறந்த மகாலிங்கம் என்பவரது மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி வழங்க உதவ வேண்டும்' என கோரினர்.