| ADDED : ஜன 28, 2024 05:23 AM
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளில் சவாரிக்கு ஈடுபடுத்தப்படும் விலங்குகளுக்கு லைசென்ஸ், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார்.அவர் தலைமையில் நேற்று நடந்த மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சப் கலெக்டர் அருண் கே.நாயர், திட்ட அலுவலர் தீபா சந்திரன் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கேரள அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். சுற்றுலா பகுதிகளில் சவாரிக்கு ஈடுபடுத்தப்படும் விலங்குகளுக்கு லைசென்ஸ், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றையும் மூணாறு, மறையூர் ஆகிய பகுதிகளில் சாகச சவாரிக்கு பயன்படுத்தப்படும் ஜீப்புகளை ஆய்வு செய்து அவற்றின் தகுதியையும் உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் பல பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு அதிரடி படையினரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.மூணாறு, வண்டிபெரியாறு ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளூர்வாசிகளை உட்படுத்தி விரைவு மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.மூணாறு நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் முக்கிய பணிகள் நடந்து வருவதாக இணை இயக்குனர் தெரிவித்தார்.