கணையப் புற்று நோய் பாதிப்பிற்கு அரசு மருத்துவக் கல்லுாரியில்.. உடனடி தீர்வு: அறுவை சிகிச்சை மூலம் 100 பேரை காப்பாற்றிய டாக்டர்கள்
உடலின் ஜீரண மண்டல உறுப்பு கணையம் ஆகும். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்கள். அதிக மது பழக்கம் கொண்டவர்களுக்கு கணையத்தில் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து புகைபிடித்து வருபவர்கள். மஞ்சள் காமாலை பாதிப்பு, உடல் எடை திடீரென பல மடங்கு குறைவது, அதிகளவு உடலில் அரிப்பு ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அது கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பாகும். இப் பாதிப்பு கணையத்தில் புற்றுநோய் கட்டிகளாக மாறி வளர ஆரம்பிக்கும். இதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றாவிட்டால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர்பிழைக்க முடியும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2022 முதல் 2025 அக்டோபர் வரை தேனி மாவட்டத்தில் 50 வயது முதல் 77 வயது வரை உள்ள 100 பேருக்கு கணையத்தில் ஏற்பட்ட புற்று நோய் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, நலமுடன் வாழ உடனடி தீர்வு ஏற்படுத்தி உள்ளனர். இம்மருத்துவக் கல்லுாரி பொது அறுவை சிகிச்சைத்துறைத் தலைவர் டாக்டர் முத்து கூறியதாவது: கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இறப்பு நேரிடும். இதில் புற்றுநோய் கட்டிகள் தோன்றியது குறித்து அறிகுறிகள் தெரிந்தவுடன் டாக்டர்களை சந்திப்பது அவசியம். மருத்துவக்கல்லுாரியில் ரத்தப் பரிசோதனை, திசு பரிசோதனையுடன் பிற புற்றுநோயை கண்டறியும் பரிசோதனைகளும் செய்து, புற்றுநோய் கட்டி உறுதி செய்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவோம். கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள், தொழில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் என 100 பேருக்கு எனது தலைமையில், இணைப் பேராசிரியர் டாக்டர் சுந்தரராஜன், உதவி பேராசரியர்கள் டாக்டர்கள் ராஜ்குமார், அசோக், பாலன் ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய்கட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தற்போதுநலமாக உள்ளனர்.ஆண்டிற்கு 10 அறுவை சிகிச்சைக்கு மேல் நடப்பதால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதுடன், முதுகலை அறுவை சிகிச்சைமாணவர்கள் தேனி மருத்துவ கல்லுாரியில் வந்து, அறுவை சிகிச்சை குறித்த கல்வி பயிலவும் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்துள்ளது என்றார். மருத்துவக்கல்லுாரி முதல்வர் டாக்டர் முத்துசித்ரா கூறியதாவது: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும். ஆனால் வெளியில் ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகும். இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் உள்ளவர்களும் பாதிப்பு இருந்தால் தேனி மருத்துவக்கல்லுாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றார்.