மாவட்ட அரசு மருத்துவமனையில் பேபி கிளினிக்கில் வசதிகளை மேம்படுத்துங்கள்: பச்சிளம் குழந்தைகள் வார்டில் நவீன கருவிகள் தேவை
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெரியகுளம், போடி தாலுகாக்களில் உள்ள மலைக்கிராமங்களான கண்ணக்கரை, சொக்கன்அலை மற்றும் அகமலை ஊராட்சி பகுதிகளிலிருந்து பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு 24 மணி நேரம் செயல்படும் சீமாங் சென்டரில் மாதம் 80 சுகப்பிரசவம், 50 சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் மாதம் 20 குறைமாத குழந்தைகளாக பிறக்கின்றன. இதற்கு காரணம் கர்ப்பகாலமான 40 வாரங்கள் முழுமையடையாதது, கர்ப்பமான மாதம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்களால் 37 வாரங்களுக்கு முன் நடக்கும் பிரசவமே குறைமாத பிரசவமாகும். டாக்டர்கள் கூறியதாவது: குறை பிரசவத்திற்காக காரணங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்க உதவும் பனிக்குடம் பிரசவ காலத்திற்கு முன்னதாக உடைவது, ஆரோக்கியமற்ற உணவு முறையால் குறை பிரசவம் நடந்து வருகிறது. 2.500 கிலோ எடை முதல் 3 கிலோ வரையிலான குழந்தைகள் ஆரோக்கியம் உள்ளன. இதற்கு குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகளின் பாதிப்புகளை பரிசோதனை மூலம் கண்டறியப்படும். மலைகிராமங்களில் பாதிப்பு அதிகம் கண்ணக்கரை, சொக்கன் அலை மலைகிராம பழங்குடியின பெண்கள் கர்ப்பிணி என்பதை உணராமல் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மறுபுறம் நடந்து செல்லும் போது மிக வேகமாக செல்வது, வயிற்றில் தவறுதலாக குச்சி இடிக்கப்பட்டு குறை பிரசவத்திற்கு உட்படுகின்றனர். இதுபோன்ற பாதிப்பிற்குள்ளாகும் குறைமாத குழந்தையை பிறந்தவுடன் சிறிது நேரம் 'இன்க்குபேட்டரில்' வைத்து தொடர் சிகிச்சை அளிப்பதில்லை. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். இதனால் பிரசவமான தாய்மார்கள் சிரமம் அடைகின்றனர். இங்கு வாரம் புதன்கிழமை தோறும் காலை 11:00 - 12:00 மணி வரை ஒரு மணி நேரம் மட்டும் 'வெல் பேபி' கிளினிக் செயல்படுகிறது. இந்த கிளினிக் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இதில் குழந்தைக்கு பாலூட்டும் முறை, பாதுகாப்பு முறை குறித்து தெரிவிக்கப்படுகிறது. இதுபோதுமானதாக இல்லை.இரு ஆண்டுகளாக செயல்படும் 'வெல்பேபி கிளினிக்' குறித்து தாய்மார்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை. மேலும் பச்சிளங்குழந்தை வார்டில் ஓரிரு இன்க்குபேட்டர்கள் மட்டுமே உள்ளன. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தும், நவீன கருவிகள் வாங்கிடவும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரையை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.