| ADDED : மே 09, 2024 06:09 AM
மூணாறு: கேரளாவில் 10ம் வகுப்பு பொது தேர்வில் 99.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று மதியம் 3:00 மணிக்கு வெளியிட்டார். தேர்வு எழுதிய 4 லட்சத்து 27 ஆயிரத்து 153 பேரில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 563 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.69 ஆகும். கடந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 99.70 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 0.01 சதவீதம் குறைந்தது. மிகவும் கூடுதலாக கோட்டயம் மாவட்டத்தில் 99.92, மிகவும் குறைவாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 99.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.மறு கூட்டலுக்கு இன்று முதல் மே 15 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இடுக்கி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 558 பேரில் 11,534 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு சதவீதம் 99.79 ஆகும். அனைத்து பாடங்களிலும் 1573 பேர் நூறு சதவீதம் மதிப்பெண் என்ற அடிப்படையில் 'ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர். சதம் அடித்து சாதனை படைத்த தமிழ் பள்ளிகள்
மூணாறைச் சுற்றி எஸ்டேட் பகுதிகளில் உள்ள அரசு தமிழ் மீடியம் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தன. சோத்துப்பாறை அரசு மேல் நிலை பள்ளி தொடர்ந்து 25ம் ஆண்டாக சதம் அடித்தது. அங்கு தேர்வு எழுதிய 11 பேரும் தேர்ச்சி பெற்றனர். கூடாரவிளை அரசு உயர் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 14 பேரும், எல்லபட்டி அரசு உயர் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 18 பேரும் தேர்ச்சி பெற்றனர். எல்லபட்டி அரசு உயர்நிலை பள்ளி தொடர்ந்து 12ம் ஆண்டாக சதம் அடித்தது.வாகுவாரை அரசு மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 16ம் ஆண்டாக சதம் அடித்தது. அங்கு தேர்வு எழுதிய 12 பேரும் தேர்ச்சி பெற்றனர். செண்டுவாரை அரசு மேல் நிலை பள்ளி தொடர்ந்து 17ம் ஆண்டாக நூறு சதவீதம் தேர்ச்சி என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது. அங்கு தேர்வு எழுதிய 14 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேவிகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் மலையாளம் மீடியத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட தேர்வு எழுதிய 19 பேரும், மூணாறு தொழில்பயிற்சி மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 118 பேரும் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி தொடர்ந்து இரண்டாவது முறையாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன் மாணவி மேக்னாகாயத்ரி அனைத்து பாடங்களிலும் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றார்.மூணாறு சிறுமலர் உயர் நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 114 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் அனு, திவ்யா, ஷாலினி, மாணவர் சங்கர் ஆகியோர் அனைத்து பாடங்களிலும் ' ஏ பிளஸ்' கிரேடு பெற்றனர்.