மாவட்டத்தில் ரத்தசோகையால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு: இரும்பு சத்துள்ள உணவுகளை சாப்பிட அறிவுறுத்தல்
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதில் ரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதம் காணப்படுகிறது. இந்த ஹீமோகுளோபின் ரத்தத்தின் சிவப்பு நிறத்திற்கும், எதிர்ப்பு சக்தி உற்பத்திக்கும் காரணமாக உள்ளன. இன்றைய இளம் தலைமுறையினர் ரத்தத்தில் ஹீமோகுளாபினின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. பெண்கள் உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் 12.5 முதல் 16 கிராம் வரையும், ஆண்களுக்கு 13.5 முதல் 16.5 சதவீதம் கிராம் இருக்க வேண்டும். ஆனால், இளம் தலைமுறையினர் வாழ்வியல் முறை, உணவு பழக்க வழக்கங்களால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் அதிகம் வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் பாதிக்கபடுகிறார்கள். பாதிப்புகள் என்ன ரத்த சோகை பாதிப்பால் இளம் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை அதிகரிக்கிறது. கை, கால் வீக்கம், தீராத உடல்வலி, முடிகொட்டுதல், வாய்ப்புண் ஏற்படுகின்றன. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருந்தால் பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு ஏற்படுகிறது. தானியங்கள், கீரைகள் சாப்பிட வேண்டும் பெரியகுளம் அரசு மருத்துவமனை ரத்தப்பரிசோதனை நிலைய அலுவலர் டாக்டர் பாரதி கூறுகையில், 'ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் இளைஞர்கள், பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கின்றனர். அதிகளவு எண்ணெய்யில் சமைத்த உணவுகள், துரித உணவுகள், பரோட்டா அதிகம் எடுத்துக்கொள்ளும் போது ரத்த சோகை ஏற்படும். இதனை தவிர்க்க இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ள கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகை உணவுகள் முருங்கை கீரை உள்ளிட்ட கீரை வகைகள் உணவில் தினமும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்கு சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்றார். தேனி மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால் கூறுகையில், ' கர்ப்பிணிகள் 20 முதல் 25 சதவீதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் 7 கிராமிற்கு கீழ் குறைவாக உள்ளது.அவர்களுக்கு ரத்தம் ஏற்றி கண்காணிக்கிறோம். கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை வருவதை தவிர்க்க கர்ப்ப காலம் முதல், குழந்தைகள் பிறந்து 6 மாதங்கள் வரை இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குகிறோம். பள்ளி மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்க வாரந்தோறும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது,' என்றார்.