அகில இந்திய கூடைப்பந்து போட்டி இந்தியன் வங்கி அணி சாம்பியன்
-பெரியகுளம்: அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய பி.டி.சி., நினைவு 64வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி மே 15ல் துவங்கி 21வரை நடந்தது.போட்டிகளில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறுமாநிலங்களிலிருந்து 22 அணிகள் மோதினர். நிறைவு நாள் போட்டியினை அமைச்சர் பெரியசாமி,எம்.பி.,தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்தனர். எம்.எல்.ஏ., சரவணக்குமார், நகராட்சி தலைவர் சுமிதா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.முதலிடத்தை பிடிக்க சென்னை இந்தியன் வங்கி அணியும், வருமானவரித்துறை அணியும் மோதியது. இரு அணி வீரர்களும் தங்களது அணி வெற்றி பெற போராடினர். ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 28:28, 31:31, 33:33, 38:38 புள்ளிக்கணக்கில் சமநிலையில் நின்றது. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் இந்தியன் வங்கி வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்தி புள்ளிகளை அதிகரித்தனர். இதனால் இந்தியன் வங்கி 90:80 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணிக்கு பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற் கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரத்தை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பர சூரியவேலு வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த வருமானவரித்துறை அணிக்கு வடுகபட்டி சங்கரலிங்கம் நினைவு சுழற் கோப்பை மற்றும் ரூ.40 ஆயிரத்தை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் டாக்டர் செல்வராஜ் வழங்கினார். மூன்றாம் இடத்தை இந்திய கப்பற்படை, நான்காம் இடம் இந்திய விமானப்படை உட்பட அனைத்து பரிசுகளை அகில உலக கூடைப்பந்து சம்மேளன கமிஷனர் தனபால் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் வழங்கினர். ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் துணைத் தலைவர் அபுதாஹிர் உட்பட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.--