உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா

கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா

கூடலுார் : தமிழக- கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.தேனி மாவட்டம், கூடலுார் அருகே தமிழக கேரள எல்லை விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். கேரள வனப்பகுதி வழியாக 14 கி.மீ., துாரத்தில் ஜீப் பாதையும், தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., தெள்ளுக்குடி வழியாக 3.5 கி.மீ., துார நடைபாதையும் உள்ளது.கண்ணகி மஞ்சள் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். துர்கை அம்மன், சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கண்ணகியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு குங்குமம், துளசி, விபூதி, பழங்கள் மற்றும் பெண்களுக்கு வளையல், அட்சயப் பாத்திரம் மூலம் அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.கூடுதல் பக்தர்கள்: வழக்கத்தை விட இந்த ஆண்டு குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக ஜீப் மூலமும், பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக நடந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். குமுளியில் இருந்து கோயில் வரை பக்தர்களை அழைத்துச் செல்ல 500க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகம் திரண்டதால் குமுளியில் ஜீப் ஏறும் இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கினர். கோயில் வளாகம், குமுளியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுத்து, பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து மாதம்தோறும் பவுர்ணமி அன்று வழிபட தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக ஹிந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.தேனி கலெக்டர் ரஞ்சீத்சிங், இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி, ஹிந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் கார்த்திக், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், எஸ்.பி., சிவப்பிரசாத், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் உள்ளிட்ட தமிழக கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தரமற்ற உணவா

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஹிந்து அறநிலைத்துறை சார்பில் விழா நடத்தப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 25 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6 டிராக்டரில் உணவு கொண்டு வரப்பட்டது. அதில் சில பாத்திரங்களில் கொண்டுவரப்பட்ட உணவு கெட்டுவிட்டதாக பக்தர்கள் சாப்பிடாமல் கீழே கொட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை