| ADDED : நவ 18, 2025 04:40 AM
மூணாறு: ''கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுத்தும் நடைமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.'' என அம்மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் தெரிவித்தார். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக டிச.,9, 11ல் நடக்கிறது. அதன் விளம்பர யுக்திகள் பல பரிமாணங்கள் கடந்து, தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தை எட்டியுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில்நுட்பம் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதனை தேர்தலின் போது தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் பொது மக்களை திசை திருப்பவும், தேர்தலை சீர்குலைக்கவும் முடியும் என தேர்தல் கமிஷன் மதிப்பிட்டது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி போலியான படங்கள், குரல் வழி வேண்டுகோள்கள், தவறான தகவல்கள் ஆகியவற்றை உருவாக்கி, அவற்றை தேர்தலில் பயன்படுத்துவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிரசாரத்தில் நம்பகத்தன்மை, போட்டியில் நியாயம் ஆகியவற்றில் அரசியல் கட்சியினர், வேட்பாளர் கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பங்களை தவறாக பயன்படுத்தாமல் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். போலி வீடியோ, தவறான தகவல், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளடக்கம், பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்துவது ஆகியவை முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது. ஒருவரின் உருவம், குரல், அடையாளம் ஆகியவற்றை தவறாக மாற்றுவதும், அதனை அனுமதி இன்றி பரப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அது போன்று அரசியல் கட்சிகளின் அதிகார பூர்வமான சமூக வலைதளங்களில் கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் அளிக்கப்பட்டாலோ, அவற்றை மூன்று மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.