உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தமிழக அரசு அலுவலக வளாகத்தில் கேமரா பொருத்தியதற்கு கேரளா எதிர்ப்பு உடனடியாக அகற்ற வலியுறுத்தல்

தமிழக அரசு அலுவலக வளாகத்தில் கேமரா பொருத்தியதற்கு கேரளா எதிர்ப்பு உடனடியாக அகற்ற வலியுறுத்தல்

கூடலுார்:தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தியதற்கு கேரள வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியான 8 ஆயிரம் ஏக்கருக்கும், சாலை மற்றும் அலுவலக கட்டடம் என 100 ஏக்கர் சேர்த்து 8 ஆயிரத்து 100 ஏக்கருக்கு தமிழகம் ஆண்டுதோறும் கேரளாவிற்கு குத்தகை செலுத்தி வருகிறது.இதில் தேக்கடியில் உள்ள தமிழக நீர்வளத்துறை அலுவலகம், ஊழியர்கள் தங்கும் குடியிருப்புகளும் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு அருகில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் ஷட்டர் பகுதியும் உள்ளது.அலுவலக பாதுகாப்பு கருதி நுழைவுப் பகுதி வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழக நீர்வளத்துறையால் 4 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் அனுமதியின்றி வைத்ததாக கேரள வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதை உடனடியாக அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரியாறு அணையின் குத்தகை நிலத்திற்குள் அலுவலகத்தின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

தமிழக விவசாயிகள் கூறியதாவது:முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கேரள வனத்துறை பிரச்னையை தொடர்ந்து பெரிதுபடுத்துகிறது. தேக்கடியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலா துறையினரால் பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்குள் பல தங்கும் விடுதிகள் கட்டியுள்ளன.அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை கேரள வனத்துறை பொருத்தியுள்ளது. தேக்கடி படகு நிறுத்தப் பகுதியிலும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக நீர் வளத்துறையினரின் அலுவலகத்தில் வைத்த கண்காணிப்பு கேமராவிற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. சமீபத்தில் அணைப்பகுதிக்கு கொண்டு சென்ற தளவாடப் பொருட்களை தடை செய்தனர். தற்போது கண்காணிப்பு கேமராவிற்கும் தடையை ஏற்படுத்தி பிரச்னையை துவக்கியுள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ