திறப்பு விழாவிற்கு நீண்ட நாட்களாக காத்திருக்கும் குமுளி பஸ் ஸ்டாண்ட்
கூடலுார்: ''தமிழக கேரள எல்லையில் குமுளி பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் சபரிமலை உற்ஸவ காலம் துவங்குவதற்கு முன் திறப்பு விழா காணப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. இங்குள்ள கேரளா பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது. தமிழகப் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி ரோட்டில் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. சபரிமலை உற்ஸவ நேரங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் இவ்வழியாக வரும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும். இந்நிலையில் போக்குவரத்து கழக டெப்போ அமைந்திருந்த பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2023 செப்.11ல் பூமி பூஜை நடத்தப்பட்டது. ஓராண்டிற்குள் பணிகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மந்தமாக நடந்து வந்தது. கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு முன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 30ல் தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பார்வையிட்டு சுற்றுச்சுவர், உயர் மின் கோபுர விளக்கு அமைப்பதற்காக நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, ஒரு மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனக் கூறியிருந்தார். தற்போது பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ளது. சபரிமலை உற்ஸவ காலம் துவங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் அதற்கு முன் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புது பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.