மாதிரி பள்ளியில் சுகாதார வளாகம் பற்றாக்குறை : மாணவர்கள் அவதி
தேவதானப்பட்டி: சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக உள்ள சுகாதார வளாகம் பற்றாக்குறையாக உள்ளதால், இயற்கை உபாதைகளை மேற்கொள்வதில் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். இதனால் உடனடியாக மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, கதிரப்பன்பட்டி, தண்ணீர் பந்தல், நாகம்பட்டி, தேவதானப்பட்டி உட்பட 30க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை 1900 பேர் படித்து வருகின்றனர். இதில் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை கடந்தாண்டு 400 பேர் படித்தனர். தற்போது 100 பேர் கூடுதலாக சேர்ந்து 500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.அதிகளவு எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு தலா 3 சுகாதார வளாகம் மட்டுமே உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். துாய்மை பணியாளரும் இல்லாததால் மொத்தம் உள்ள 6 கழிப்பறைகளிலும் சுகாதாரம் இல்லாமல் உள்ளது. மாவட்ட பள்ளி கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.