| ADDED : ஜன 28, 2024 04:49 AM
ஆண்டிபட்டி, ; ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டும் 1996ல் துவக்கப்பட்டு 28 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.இந்நிலையில் ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் நீதிமன்றம் கட்டடம் கட்ட 22,581 சதுர அடி பரப்பில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், 1930 சதுர அடியில் தனித்தனியே நீதித்துறை அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மூலம் ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கான விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தனபால் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட முதன்மை நீதிபதி அறிவொளி, தேனி கலெக்டர் ஷஜீவனா, எஸ்.பி., சிவபிரசாத் உட்பட ஆண்டிபட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்திற்கான பாதுகாப்பு சுவர், வாகன நிறுத்துமிடம், ரோடு வசதி ஆகியவை இடம் பெற உள்ளன. நீதிபதி அலுவலக அறை, தனி உதவியாளர் அறை உட்பட பல்வேறு வசதிகள் அமைய உள்ளன. நீதிமன்றம் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிகளை 18 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.