கண்மாய் காப்போம்: அதிகாரி கண்மாயில் நீர் தேங்காததால் 10 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு கோத்தலுாத்து சுற்றியுள்ள கிராமங்களில் கேள்விக்குறியாகும் விவசாயம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கோத்தலூத்து அதிகாரி கண்மாய்க்கு பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லாததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது.300 ஏக்கர் பரப்பிலான இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலையில் இருந்து நாகலாறு ஓடையில் கிடைக்கும் நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. கண்மாய் மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மையால் பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்குவதில்லை. கடந்த காலங்களில் கண்மாயில் தேங்கிய நீரால் கோத்தலூத்து, மறவபட்டி, வரதராஜபுரம் கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நேரடி பாசனம் நடந்தது. கண்மாயில் ஒருமுறை முழு அளவில் நீர் தேங்கினால் இரு ஆண்டுகளுக்கு இப்பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் கைகொடுக்கும். பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் நிரம்பாததால் கிராமங்களில் விவசாயம் பாதித்துள்ளது. கண்மாய் பிரச்சனை குறித்து விவசாயிகள் கூறியதாவது:பெரியாறு உபரி நீர் கிடைத்தால்60 கண்மாய்கள், ஊரணி நிரம்பும் சின்னச்சாமி, மலர் விவசாயிகள் சங்க தலைவர், மாயாண்டிபட்டி: கதிர்நரசிங்கபுரம் மாட்டுப்பாலம் முதல் கண்மாய் வரை 3 கி.மீ.,தூரத்திற்கு நீர்வரத்து ஓடை பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது. விவசாயக் கழிவுகளை ஓடையில் கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக கண்மாயில் நீர் தேங்காததால் கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, கோத்தலூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி, மறவபட்டி, வரதராஜபுரம், போடிதாசன்பட்டி, மணியாரம்பட்டி, மறவபட்டி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் நிலவும் வறட்சியை போக்குவதற்கு நிரந்தர தீர்வாக முல்லை பெரியாறு அணை உபரி நீரை, குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து கண்மாயில் தேக்குவதே தீர்வாகும். மூன்று அடி விட்டமுள்ள குழாய் மூலம் மழைக்காலத்தில் உபரி நீர் 45 நாட்கள் வந்தாலே ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 19 கண்மாய்கள் 40 ஊரணிகள் நிரம்பிவிடும். அரசு இதற்கான திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நீர் வரத்து பாதையில் தனியார் ரோடு அமைப்புநவநீதகிருஷ்ணன், வரதராஜபுரம்: பல ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் கண்மாய் தூர் வாருவதற்கான பணி துவங்கி மறுநாளே நிறுத்தப்பட்டது. அதன்பின் அதற்கான நடவடிக்கை இல்லை. தற்போது கண்மாய் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. நீர்வரத்து வாய்க்கால்கள், ஓடைகள் புதர் மண்டியுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன் வரதராஜபுரம் பாலம் வரை தொண்டு நிறுவனம் மூலம் ஓடை சுத்தம் செய்யப்பட்டது. கதிர்நரசிங்கபுரம் அருகே ஓடையின் குறுக்கே தனியார் ரோடு அமைத்து நீர்வரத்து பாதையை பாதிக்க செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கையும் இல்லை. இப்பகுதி கிணறுகள் 200 அடி ஆழமாக உள்ளது. போர்வெல்கள் 1100 அடிக்கும் அதிகமாக உள்ளது. கிணறுகளில் சுரக்கும் நீர் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே விவசாயிகள் பாசன பரப்பை சுருக்கி கொண்டனர். ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து கிராம மக்களும் விவசாயம் கால்நடை வளர்ப்பு மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இத்தொழிலுக்கு தேவையான நீர் ஆதாரத்தை மேம்படுத்த விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும்.