இடையூறு செய்தவர் கொலை; கள்ளக்காதலர்களுக்கு ஆயுள்
தேனி : தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. தம்பி சதீஷ் 24. திருமணம் ஆகாத கூலித்தொழிலாளி. காளீஸ்வரி வீட்டின் அருகே கணவரை இழந்த நந்தினி மகன், மகளுடன் வசித்தார்.சதீஷுக்கும் நந்தினிக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நந்தினி கம்பம் மஞ்சக்குப்பம் குடத்துக்காரர் தெருவில் வசித்து வந்தார். சதீஷ் அடிக்கடி நந்தினி வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் நந்தினிக்கு கம்பத்தை சேர்ந்த பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இதைஅறிந்த சதீஷ், நந்தினி வீட்டிற்கு சென்று கண்டித்தார். எரிச்சல் அடைந்த நந்தினி 2024 மார்ச் 29 இரவு சதீஷை அலைபேசியில் வீட்டிற்கு அழைத்தார். அங்கு பிரபாகரன் இருந்தார்.சதீஷ், பிரபாகரனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சதீஷை நந்தினி கீழே தள்ளிவிட்டார். பிரபாகரன் அங்கு கிடந்த கண்ணாடி துண்டால் சதீைஷ குத்தினார். மருத்துவமனையில் சதீஷ் உயிரிழந்தார். போலீசார் பிரபாகரனை கொலை வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று நந்தினி, பிரபாகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.