ரூ. 11 கோடி மதிப்பீட்டில் கம்பம் உத்தமுத்து வாய்க்கால் பராமரிப்பு
கம்பம் : ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 12.6 கி.மீ. நீளத்திற்கு உத்தமுத்து வாய்க்காலில் சீரமைப்பு பணி துவங்கியது.முல்லை பெரியாறு பாசனத்தில் கம்பம் உத்தமுத்து வாய்க்கால் மூலம் 2500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. சுருளிப்பட்டி ரோட்டில் தொட்டமான் துறையில் ஆரம்பமாகும் வாய்க்கால் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி , உத்தமபாளையம், உ. அம்மாபட்டி வரை செல்கிறது. இதன் மொத்த நீளம் 12.6 கி.மீ. ஆகும். இந்த வாய்க்காலில் 62 மடைகள் உள்ளன. இதில் மிக மோசமாக சேதமடைந்துள்ள 35 மடைகள், இரண்டு அணைக்கட்டுகள், 12.6. கி.மீ. நீளமுள்ள வாய்க்கால் ஆகியவை ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு செய்யும் பணிகளை நீர்வளத்துறை துவக்கி உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது.உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் கூறுகையில், 'நபார்டு வங்கி நிதி உதவியில் உத்தமுத்து வாய்க்கால் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. முதல் போக சாகுபடி பணிகள் துவங்குவதற்கு முன் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். கரைகள் பலப்படுத்துதல், 35 மடைகளை சீரமைத்தல், இரண்டு அணைக்கட்டுக்களை சரிப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இதன் மூலம் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்படும் என்றார்.