மேகமலை கிராமங்களுக்கு நிரந்தர குடிநீர் திட்டம் தேவை
சின்னமனூர் : மேகமலை மலைக் கிராம மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர திட்டம் தயாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மேல் மணலாறு, கீழ் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராசா மெட்டு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமானவை என்பதால் குடிநீர், தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை எஸ்டேட் நிர்வாகம் செய்து தருகிறது. பேரூராட்சி பெரிய அளவில் எந்த பணிகளும் மேற்கொள்வதில்லை.இந்நிலையில் ஹைவேவிஸ் கண்ணாடி பங்களா பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து குடிநீர் குடியிருப்புகளுக்கு நீண்ட காலமாக சப்ளையாகிறது. கடந்தாண்டு குடிநீர் பைப் லைனை யானை சேதப்படுத்தியது. இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.சேதமடைந்த குழாய் சரி செய்ய தொழிலாளர்கள் முயன்ற போது வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. எஸ்டேட் நிர்வாகம் கடிதம் வழங்க வனத்துறை வலியுறுத்தியது. எஸ்டேட் நிர்வாகம் 80 ஆண்டுகளாக உள்ள குடிநீர் திட்டத்திற்கு இப்போது எதற்காக கடிதம் தர வேண்டும் என்றனர். இரு தரப்பினருக்கும் பிரச்னை ஏற்பட்டு - போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலிகமாக பைப் லைனை சீரமைக்க அனுமதித்து, குடிநீர் சப்ளை செய்கின்றனர்.மலைக் கிராம மக்களுக்கென நிரந்தர குடிநீர் திட்டம் ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து சுத்திகரிப்பு செய்து விநியோகம் செய்யலாம் அல்லது தென் பழநியில் இருந்து ஹைவேவிஸ் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.எனவே, ஹைவேவிஸ் பேரூராட்சி நிர்வாகம் மலைக் கிராம மக்களின் குடிநீர் தேவைக்கென சிறப்பு திட்டம் தயாரித்து செயல்படுத்த கோரியுள்ளனர்.