உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாட்டிற்கு வராத துணை சுகாதார நிலையம் மேலச்சிந்தலச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிப்பு

பயன்பாட்டிற்கு வராத துணை சுகாதார நிலையம் மேலச்சிந்தலச்சேரியில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிப்பு

உத்தமபாளையம் : மேலசிந்தலச்சேரியில் இரு ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காததால் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை சுகாதாரம் நிலையம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. உத்தமபாளையம் ஒன்றியம் மேலச் சிந்தலச்சேரி 9 வார்டுகளை கொண்டுள்ளது. இங்கு 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சியின் உட்கடை கிராமமாக கீழச்சிந்தலச்சேரி, காலனி பகுதிகள் உள்ளன. இங்கு துப்பரவு பணியாளர் ஒருவர் மட்டும் இருப்பதால், குப்பை அகற்றம், சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் சரிவர நடப்பதில்லை. திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் உள்ளது. சேகரமாகும் குப்பையை ஊருக்கு வெளியே கொட்டுகிறனர். திடக்கழிவு மேலாண்மை இடத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றி விட்டனர். கீழச் சிந்தலக்கோயில் மெயின் ரோட்டில் கட்டப்பட்ட கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்நடை கிளை நிலையத்திற்கு மேல் பக்கம் உள்ள தெரு திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்காததால் 2 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு அனுமதிக்கவில்லை. எனவே, அவசரசிகிச்சைக்கு டி. சிந்தலச்சேரி அல்லது கோம்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.2 கோடிக்கு பணிகள் அரைகுறையாக செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வெள்ள நீர் வரும் ஓடை தண்ணீர் காலனிக்குள் செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டும். 10 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை தங்கமுருகன்,மேலச் சிந்தலச்சேரி : ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கவில்லை. குடிநீர் 10 நாட்களாக வராமல் இருந்தது. தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது. கழிப்பறையில் தண்ணீர் வீணாகி வருகிறது. தெருவிளக்குகள் காற்றடித்தால் பழுதாகி விடும். அதன் பின் அதை சரி செய்ய பல வாரங்கள் ஆகும். சாக்கடை சுத்தம் செய்ய எப்போதாவது ஒருமுறை தான் வருகின்றனர். பயன்பாட்டிற்கு வராத ஆரம்ப சுகாதார நிலையம் ஈஸ்வரன், விவசாயி: கிராமத்தில் கட்டிய துணை சுகாதார நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்காததால் இரு ஆண்டுகளாக கட்டடம் திறக்கவில்லை. அவசர மருத்துவ சிகிச்சை என்றால் அருகில் உள்ள டி. சிந்தலச்சேரிக்கு தான் செல்ல வேண்டும். இதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் வினியோகம் தினமும் வழங்க வேண்டும். அடிக்கடி மின்தடை செய்வதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஊரை சுற்றியுள்ள ஜக்கப்ப கவுடர் குளம், அரசன் குளம், தாசன் குளம், செட்டிகுளம் ஆகியவற்றில் மண் மேவி உள்ளதால் மழை நீர் தேங்காமல் வீணாகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. கழிப்பறைகளையும், தெருக்களையும் பராமரிக்க வேண்டும். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், முன்பு குடிநீர் பிரச்னை இருந்தது. தற்போது சரி செய்துள்ளோம். புலிகுத்தி அருகே தனியாக தொட்டி கட்டி அங்கிருந்து சப்ளை செய்கிறோம். ரூ.50 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் சிமென்ட் ரோடு பணிகள் நடந்து வருகிறது. ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்பு வழங்கி வருகிறோம். 705 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை ஷெட் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் குப்பை கொட்டவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி