சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 3 ஆயுள் தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தேனி: தேனி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி சிவசந்திரனுக்கு 39, மூன்று ஆயுள் தண்டணை விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கூலித்தொழிலாளி சிவசந்திரன், 2015ல் பலாத்காரம் செய்தார். சிறுமியை கேரளாவிற்கு அழைத்து சென்று மீண்டும் தேனி அழைத்து வந்தனர். சிறுமி வசித்த பகுதிக்கு சென்ற சிவசந்திரன், சிறுமியை அழைத்து சென்று பாண்டி என்பவர் வீட்டில் தங்கவைத்தார். அங்கும் சிறுமியை பலாத்காரம் செய்தார். அதற்கு சிவசந்திரன் மனைவி மாரீஸ்வரி, நண்பர் பாண்டி உடந்தையாக இருந்தனர். சிறுமியை காணவில்லை என அவரது தந்தை போடி நகர் போலீசில் புகார் அளித்தார்.இந்நிலையில் சிவசந்திரன், மாரீஸ்வரி, பாண்டி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பாண்டி கடந்தாண்டு இறந்தார். விசாரணை முடிந்து சிவசந்திரனுக்கு 3 சட்ட பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனை என 3 ஆயுள் தண்டனையும், 3 பிரிவுகளின் கீழ் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். மாரீஸ்வரி விடுவிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.