| ADDED : டிச 03, 2025 06:15 AM
கடமலைக்குண்டு:வனத்தறை தடையால் வருஷநாடு -வாலிப்பாறை ரோட்டில் 3 கி.மீ., துார ரோடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது. எம்.எல்.ஏ., மகாராஜனிடம் முறையிட்ட போது 15 நாட்களில் அனுமதி பெற்று தருவதாக உறுதி அளித்தார் வருஷநாடு முதல் வாலிப்பாறை வரை 10 கி.மீ., தூரம் ரோடு பராமரிக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது. இந்த ரோட்டில் குறிப்பிட்ட சில பகுதிகள் வனப் பகுதிக்குள் வருவதாக கூறி வனத்துறையினர் அப்பகுதியில் ரோடு அமைக்கும் பணிக்கு தடை விதித்தனர். இதனால் 10 கி.மீ., நீளம் உள்ள ரோட்டில் வனப் பகுதிக்குள் செல்லும் 3 கி.மீ., நீளம் ரோடு புதுப்பிக்கவில்லை. தற்போது அப்பகுதியில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு ரோடு சேதம் அடைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேறு வழியின்றி சேதமடைந்த ரோட்டின் வழியாக தினமும் சென்று வருகின்றனர். வனத்துறை தடையால் கிடப்பில் உள்ள ரோடு பராமரிப்பு பணிகளை முழுமைப்படுத்த இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் மலைக்கிராமங்களில் மழை சேதம் குறித்து ஆய்வு நடத்த ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் மயிலாடும்பாறை கிராமத்திற்கு சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த வாலிப்பாறை, தும்மக்குண்டு கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜனிடம் முறையிட்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தினர். வனத்துறையின் தடையால் இப்பகுதியில் முடங்கியுள்ள அனைத்து ரோடு பணிகளையும் முடிக்க இன்னும் 15 நாட்களுக்குள் தமிழக அரசு மூலம் அனுமதி பெற்று தருவதாக எம்.எல்.ஏ., மகாராஜன் பொதுமக்களுக்கு உறுதி அளித்தார்.