ஒடிசா கஞ்சா வியாபாரி கைது
தேவதானப்பட்டி : தேனிமாவட்டம் காட்ரோடு சோதனைச்சாவடியில் காரில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபரான ஒடிசாவைச் சேர்ந்த வியாபாரி சுராஜ்சிங்கை 30, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடியில் 2023 டிச., 2ல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவைச் சேர்ந்த காரில் இருந்து 26 கிலோ கஞ்சா, ரூ.12,570, இரு அலைபேசியை பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காரை ஓட்டி வந்த சஜு 35, நண்பர்கள் சோனி 32, ராஜேஷ் 34, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டம், ஜெயபூர் பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரி சுராஜ் சிங்கை பிடிக்க கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., கதிரேசன் கொண்ட தனிப்படை போலீசார் ஒடிசா சென்றனர். அங்கு சுராஜ்சிங்கை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவரை ஜெயபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். மாவட்டத்தில் 10 மாதங்களில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த கஞ்சா விற்பனை செய்த ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 16 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.